கட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 04 2020]

பல ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது. இதனை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட நிலையில் நாளை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ராமர் பிறந்த இடமான அயோத்தியில் நடைபெற உள்ளது.

இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ராமர் கோயில் உலகப்புகழ் பெற்ற வித்தியாசமான கட்டிடக்கலையில் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற வகையில் பார்த்து பார்த்து இந்த கோவிலின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயில் கட்டி முடித்தவுடன் அதன் கோபுரத்தில் காவிக்கொடி உடன் கம்பீரமாக இருக்கும் வகையில் உள்ள இந்த புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் உள்பட முக்கிய பிரபலங்கள் நாளை அயோத்திக்கு வர உள்ளதை அடுத்து அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.