Ayogya Review
'அயோக்யா' : விஷாலின் கர்ணதாண்டவம்
விஷாலின் 'அயோக்யா' சிலபல தடைகளை தாண்டி பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
போலீஸ் என்றாலே அதிகமாக சம்பாதிக்கும் ஒரு தொழில் என சிறுவயதிலேயே மனதில் ஆழமாக பதிந்துவிட்டதால் எப்படியாவது போலீஸ் ஆகி கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் 'கர்ணன்' (விஷால்) மனதில் எழுகிறது. அதேபோல் இன்ஸ்பெக்டர் ஆனதும் திருடர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் ஆதரவு தந்து லட்சம், கோடி என சம்பாதிக்கும் விஷாலின் வாழ்வில் திடீரென ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பதால் திடீரென நல்ல போலீசாக விஷால் மாற, அதனால் ஏற்படும் பிரச்சனைகளும், விளைவுகளும், முடிவும் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.
முதல் பாதி முழுவதும், இரண்டாம் பாதியில் சில நிமிடங்களும் நெகட்டிவ் ஹீரோ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஷால், நல்லவராக மாறிய பின் எடுக்கும் விஸ்வரூப நடிப்பை ரசிக்க முடிகிறது. முதல் பாதியில் காமெடி மற்றும் கொடூர வில்லன் போல் அதகளப்படுத்தும் காட்சிகள் கொஞ்சம் திகட்ட வைத்தாலும் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துவிடுகிறார் விஷால்
வழக்கம்போல் ராஷிகண்ணா, நாயகியாகவும், ஒரு டூயட் பாடலுக்காகவும் மட்டும் இந்த படத்தில் வலம் வருகிறார். ஒருசில காட்சிகளில் மட்டும் நடிப்புக்கு வேலை உள்ளது.
பார்த்திபனை இந்த படத்தில் காமெடி வில்லனாக்கியுள்ளனர். இந்த படத்தின் கதைக்கு கொஞ்சம் கொடூர வில்லன் தேவை. பார்த்திபன் நடிப்பிலும் அதனை செய்யவில்லை என்பது ஏமாற்றமே
கே.எஸ்.ரவிகுமாருக்கு அழுத்தமாக மனதில் பதியும் வேடம். மோசமான இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடிக்க முடியாது என்று சொல்வது, அதன்பின் ஒரு கட்டத்தில் மனமகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்து நெகிழ வைப்பது, கிளைமாக்ஸில் விஷால் எடுக்கும் முடிவை எண்ணி கண்கலங்குவது என கே.எஸ்.ரவிகுமார் தனது அனுபவத்தால் இந்த கேரக்டரை தூக்கி நிறுத்தியுள்ளார்.
பூஜா தேவரியா, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, ஆனந்த்ராஜ் ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த சின்ன கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர். யோகிபாபு காமெடி சுத்தமாக எடுபடவில்லை.
சாம் சிஎஸ் இசையில் இரண்டே பாடல்கள். இதில் ஒன்று சனாகானின் தேவையில்லாத ஐட்டம் பாடல். ஒரு ஆக்சன் படத்திற்கேற்ற சரியான பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது.
கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஓகே ரகம். முதல் பாதியில் எடிட்டர் ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ராம் லட்சுமண் ஆக்சன் காட்சி அதிர வைக்கின்றது. குறிப்பாக போலீஸ் ஸ்டேசன் ஸ்டண்ட் காட்சி ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்து.
இயக்குனர் வெங்கட் மோகன் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான 'டெம்பர்' படத்தை தமிழுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்துள்ளார். முதல் பாதியில் விஷாலிடம் இருந்து கொஞ்சம் அலட்டல் இல்லாத நடிப்பை வாங்கியிருக்கலாம். முதல் பாதியில் உள்ள ஒருசில காட்சிகளை படத்தின் மெயின் கதையோடு புத்திசாலித்துடன் இணைத்திருந்தாலும் முதல் பாதியை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கலாம். இரண்டாம் பாதியில் குறிப்பாக விஷால் நல்லவராக மாறியவுடன் திரைக்கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் கோர்ட் காட்சியில் உள்ள திருப்பம் யாருமே எதிர்பாராதது. செண்டிமெண்ட் காட்சிகளும் சரியாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. டெம்பர்' ரீமேக்காக இருந்தாலும் சமீபத்தில் நடந்த பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தை புத்திசாலித்தனத்துடன் இணைத்துள்ளார் இயக்குனர். ஒரு பெண்ணை தைரியமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்கு காரணம், குற்றவாளி என்று நிரூபித்தாலும் தண்டனை கிடைக்க நீண்டகாலம் ஆகும் என்ற சட்டத்தின் ஓட்டையை படத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர். அப்பீல் கூட போகாமல் உடனே தண்டனை என்பது இந்தியாவில் சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை என்றாலும் இதுபோல் நடந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் படம் முடிந்து வெளியே வரும்போது எண்ண தோன்றுகிறது.
மொத்தத்தில் இரண்டாம் பாதியின் விறுவிறுப்புக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம்
- Read in English