வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!
- IndiaGlitz, [Wednesday,October 28 2020]
நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில் ஒன்றாக இணைந்து அந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்து அல்லது தாண்டி வாழ்ந்து காட்டுவது என்பதை உணர்த்துவதற்காகத்தான் வைக்கப்படுகிறது. அதனால்தான் கொலு வழிபாட்டில் இறைவன் பொம்மைகளைத் தவிர ஆண், பெண், வணிகன், செட்டியார், பிராமணர், இயற்கை, மரம் என்று ஏகப்பட்ட பொம்மைகள் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் கொலு வழிபாடு மிகவும் சிறப்பாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று சென்னையை சேர்ந்த நந்தினி என்பவர் 3500 வித்தியாசமான விநாயகர் சிலையை கொண்டு கொலு வைத்திருக்கிறார். அதோடு சேர்த்து அவரிடம் 6000 கொலு சிலைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு கொலு வழிபாட்டிற்காக கொரோனா விநாயகர் என்ற பெயரில் புது விநாயகர் சிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கொரோனா நேரத்தில் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகளை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான விநாயகர் சிலையை சேகரிக்கும் பழக்கத்தையும் இவர் கொண்டிருக்கிறார். அதில் புதுமையை புகுத்துவதற்காக தன்னுடைய கற்பனை திறனை பயன்படுத்தி தனக்கு வேண்டியபடி கைவினை கலைஞர்களை வைத்து சிலைகளை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். அதில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் விநாயகர், ஜிம் ஒர்க் அவுட் செய்யும் விநாயகர் என்று இவருடைய பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.