அவஞ்சேர்ஸ் இன்பினிட்டி வார் - உச்சகட்ட பிரமாண்டம்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிரம்மாண்டத்தின் உச்சகட்டமான படம் அவஞ்சேர்ஸ் இன்பினிட்டி வார் வரும் வெள்ளியன்று வெளிவருகிறது. ரசிகர்கள் கொடுக்கும் காசு படத்தில் வரும் இருபதுக்கும் மேற்பட்ட நாயக நாயகியரை பார்ப்பதற்கே சரியாக போய்விடும் மீதமிருக்கும் பிரமிக்க வைக்கும் அங்கங்களும் காட்சிகளும் தொழில் நுட்பமும் கூடுதல் போனஸ்.
தானோஸ் எனப்படும் மலை அளவு உயரமான வில்லன் பிரபஞ்சத்தில் இருக்கும் ஆறு கற்களை தேடி ஒவ்வொரு கிரகத்திற்கும் சென்று கைப்பற்றிய பிறகு அங்கு வாழும் மனிதர்களை அழிக்கிறான். அவனை எதிர்த்து போரிட அவென்ஜர்ஸ் குழு ஒன்று கூடுகிறது. ஒரு பக்கம் அயர்ன் மேன் டாக்டர் ஸ்டரேஞ் மற்றும் ஸ்பைடர் மென் ஒரு பக்கம். தோர் மற்றும் கார்ட்டியன்ஸ் ஆப் தி காலக்சி குழுவினர் இன்னொரு புறம் பிளாக் பாணதீர் பிளாக் வீடோ போன்றோர் என்று ஒவ்வொரு குழுவாக ஒன்று திரண்டு தானோசை தடுத்து நிறுத்தினார்களா இல்லையா என்பதே மீதி கதை.
தானோஸ் என்கிற தென்னை மரம் சைசில் நடித்திருக்கும் ஜாஷ் ப்ராலின் தன் நடிப்பால் ஆட்டி படைக்கிறார். தான் அதிகம் பாசம் வைத்திருக்கும் வளர்ப்பு மகள் கோமோராவிடம் உருகுவதாகட்டும் கற்களை கண்டு பிடித்து பாதி பிரபஞ்சத்தை அழிக்கும் சக்தியை பெற வேண்டும் என்று துடிப்பதிலாகட்டும் பின் சண்டை காட்சிகளில் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் தனி ஒருவனாக சமாளிப்பதிலாகட்டும் அசத்தல். மற்றவர்களை விட அயர்ன் மேனாக வரும் ராபர்ட் டோவுனி, டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக வரும் பெனடிக்ட் கம்பார்பேச், தோராக வரும் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் ஸ்டார் லாடாக வரும் க்றிஸ் பிராட் ஆகியோர்க்கு முக்கியத்துவம் அதிகம் அதை நன்றாக பயன் படுத்தி மின்னுகிறார்கள். ஸ்பைடர் மேனாக வரும் டாம் ஹாலந்து தன் சிறுபிள்ளைத்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிச்சி கிச்சி மூட்டுகிறார். காப்டன் அமெரிக்காவாக வரும் கிறிஸ் எவன்ஸ், பிளாக் விடோவாக வரும் ஸ்கார்லட் ஜோஹான்சன் மற்றும் ஹுல்க்காக வரும் மார்க் ரூபெல்லா ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். இதர சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஆக்க்ஷன் காட்சிகளில் வந்து அசத்துகிறார்கள். ராக்கட் எனும் கீரிப்பிள்ளை தோற்றத்துடன் வரும் வேற்று கிரக வாசி மற்றும் மரத்தை நினைவு படுத்தும் க்ரூட் ஆகியோர் சி ஜி மூலம் கவர்கின்றன. கேப்டன் அமெரிக்கா மற்றும் தோர் ஆகியோரின் அறிமுக காட்சிகள் மாஸ் ஹீரோ ஸ்டைலில் அரங்கத்தை அதிர வைக்கின்றன.
அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் முக்கிய சுவாரஸ்யமே நாம் முன்பு சொன்னது போல இருபதுக்கும் மேற்பட்ட அபிமான ஹீரோக்களும் ஹீரோயினிகளும் திரையில் தோன்றி அவரவர் பாணியில் ஆச்சர்ய பட வைப்பதே. இதற்கு படத்தில் கொஞ்சம் கூட குறையில்லை. வகாண்டா, டைட்டன், நோவேர் போன்ற கிரகங்களின் காட்சி அமைப்புகள் ஆச்சர்ய பட வைக்கின்றன. கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி இருக்கிறது அது ஒன்றே இன்னும் ஒரு வருடம் கழித்து வெளியாக போகும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கு டிக்கெட்டுகளை கோடிக்கணக்கானோர் இப்போதே வாங்க தூண்டி விடும். கேமிரா வில் எத்தனை கோணங்கள் இருக்கின்றனவோ அதை அத்தனையும் படத்தில் வைத்த கேமிரா மேன் அவருக்கு ஈடு கொடுத்த எடிட்டர் ஆகியோர் பாராட்டு கூறியவர்கள். அன்னன் தம்பி இயக்குனர்கள் ஜோசப் மற்றும் ஆண்டனி ரூசோ காட்சி அமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கு கொடுக்க வில்லை என்கிற குறை இருந்தாலும் பொழுது போக்குக்கு உத்திரவாதம் தந்து இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
பிரமாண்ட பட ரசிகர்களுக்கு இது ஒரு செமத்தியான விருந்து
Comments