வடதுருவ ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக மூடிக்கொண்டது!!! அறிவியல் காரணங்கள் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதர்கள் ஏற்படுத்திய கடுமையான மாசுபாட்டால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ஓட்டையை உண்டாகியிருந்தது. இதுகுறித்து உலக நாடுகள் மாசுபாட்டை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஓசோனில் மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக கோப்பர் நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு மையத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் செய்தி வெளியிட்டு இருந்தனர்.
மேலும், இதுகுறித்த அடுத்தக்கட்ட ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையின் அளவு கிரின்லாந்து நாட்டைவிட பெரியதாக இருக்கிறது எனவும் கூறப்பட்டது. பூமியின் வட துருவத்தில் கண்டறியப்பட்ட இந்த ஓட்டையே இதுவரை பெரியது எனவும் ஆய்வில் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஓசோன் படலம் அடிப்படையில் சூரியன் வெளியிடும் புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி அந்த பாதிப்பிலிருந்து பூமியைக் காப்பாற்றிவரும் ஒரு சிறம்சம் பொருந்திய ஒன்றாக விஞ்ஞான உலகம் இதுவரை நம்பிவருகிறது. தற்போது மனிதர்களின் வேண்டாத செயல்களால் பாதுகாப்பு படலத்தில் ஓட்டை விழுந்து பூமிக்கே அச்சுறுத்தலை ஏற்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கில் அதாவது 10 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் ஓசோன் படலம் பூமியை பல்வேறுபட்ட கதிர் வீச்சுகளில் இருந்து பத்திரமாகக் காப்பாற்றி வருகிறது. இந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதால் அவ்வபோது பூமியில் உள்ள பனிப்பாறைகள் எல்லாம் உருகும் அபயாமும் நிகழுகிறது. மேலும் பூமியில் உள்ள உயிரினங்களின் நோய் எதிர்ப்பு மண்டலமும் இதனால் சிதைவைச் சந்திக்கின்றன. தோல் புற்றுநோய், கண்புரை போன்ற நேரடியான பாதிப்புகளையும் இந்த கதிர் வீச்சுகள் ஏற்படுத்திவிடும்.
தற்போது ஓசோன் படலத்தில் காணப்பட்ட பெரிய ஓட்டை தானாகவே மூடிக்கொண்டு விட்டதாக வளிமண்டல கண்காணிப்பு மையத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வு குறித்து கொரோனா ஊரடங்கினால் வெளியிடப்படும் கார்பன் அளவு குறைந்து ஓசோன் படலம் மூடிக்கொண்டு விட்டதாகச் சிலர் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர். ஆனால் உண்மையில் வட துருவ பகுதியல் நிலவி வரும் அசாதாரணமான வானிலையே இந்த ஓசோன் படலத்தின் துளை மூடப்பட்டதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வட துருவப் பகுதிகளின் மாற்றங்களுக்கு அங்கு நிலவும் கடுமையான வானிலைகளும் ஒரு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும், வட துருவத்தில் உள்ள ஓசோன் படலத்தின் அளவும் தற்போது குறைந்து இருக்கிறது. இந்த குறைவினால் ஓட்டை மறைந்து விட்டதைப் போன்ற கற்பனைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது. இது வானிலை மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகள். ஒட்டுமொத்த உலகத்தைப் பொறுத்தவரை ஓசோன் படலத்தின் அளவு குறையவில்லை. வட துருவ வானிலை மாற்றங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது ஓசோன் படலம் மீண்டும் பெரிய துளையுடன் காட்சி அளிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பூமியின் வட துருவத்தில் உள்ள ஓசோன் படலத்தின் ஓட்டையை விட அண்டார்டிகா பகுதியில் காணப்படும் ஓட்டையின் அளவு அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 1996 ஆம் ஆண்டு குளோரோஃப்ளூரோ கார்பான் அளவை குறைக்க உலக நாடுகள் கடுமையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்தன. அதில் இருந்து ஓசோன் படலம் குறைவான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மாசுபாட்டின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனவும் இதைச் சரிசெய்யக் கூடிய அளவைத் தாண்டியிருக்கிறது எனவும் ஆராய்ச்சியாளாகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஓசோன் படலத்தின் துளை மறைவிற்கு காரணம் கொரோனா ஊரடங்கு அல்ல, வடதுருவ வானிலையில் நடக்கும் அசதாரணமாக சூழலே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த மறைவு வெறுமனே வானிலை மாற்றங்களால் நிகழ்வது, வானிலை மாறும்போது இயல்பான நிலைக்குத் திரும்பும் எனவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments