ஆட்டிசம் குறைபாடு… ஆனால் ஐன்ஸ்டீனைவிட அதிக IQ-வோடு சாதித்துக் காட்டிய சிறுமி!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

அறிவுக் கூர்மைக்கும் உடல் குறைபாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் 11 வயது சிறுமியான சான்செஸ். ஆட்டிசம் பாதிப்பால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் பலருக்கு மத்தியில் ஐன்ஸ்டீனைவிட 11 மடங்கு IQ-களைப் பெற்று தற்போது நாசாவில் இணைந்து பணியாற்ற சான்செஸ் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மெக்சிகோவிலுள்ள அதாரா பெரெஸ் நகரத்தில் பிறந்த சான்செஸ் தனது 3 வயதிலேயே பேச்சில் தடுமாற்றத்தை உணர்ந்திருக்கிறார். மேலும் மற்றக் குழந்தைகளோடு பேசவோ, விளையாடவோ முடியாமல் கடுமையான மனச்சோர்வுடன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சிறிய வயதில் பெரிய அட்டவணை மற்றும் இயற்கணிதத்தை எளிதாகக் கற்றதை உணர்ந்த அவருடைய அம்மா நயேலி சான்செஸ் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

இங்குதான் சான்செஸின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியிருக்கிறது. அதாவது சான்செஸிற்கு ஐன்ஸ்டீனைவிட 11 மடங்கு அதிக IQ- இருப்பதை மருத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 162 IQ- கொண்டிருக்கும் அவர் ஸடீபன் ஹாக்கிங்கைவிட அதிக அறிவுத்திறன் பெற்றிருப்பதை பார்த்து வியந்துள்ளனர். கொடுமையான மனஇறுக்கத்திற்கு மத்தியில் ஆரம்பப் பள்ளியை முடித்த சான்செஸ் பின்னர் சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டு ஒரே வருடத்தில் நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.

அதோடு நிறுத்தாமல் சிஎன்சிஐ பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பட்டம், மெக்சிகோவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற தொழில்துறை பொறியியல் பட்டம் ஆகியவற்றை தனது 11 வயதிற்குள்ளேயே முடித்துக் காட்டியுள்ளார். மேலும் முதுநிலை பட்டத்தைப் பெறுவதற்காகவும் அவர் தற்போது காத்திருக்கிறார். இதைத்தவிர நாசா விண்வெளி நிலையத்தில் பணியாற்ற விரும்பும் அவர் மெக்சிகன் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிது.

சிறிய வயதில் மனஇறுக்கம் காரணமாக பேசுவதற்குக் கூட கஷ்டப்பட்ட சான்செஸ் இப்போது ஒரு மேடை பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். ஆட்டிசம் குறைபாடு ஆனால் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸைவிட பல மடங்கு IQ-களோடு இருக்கும் சான்செஸ் 11 வயதிற்குள் பல பொறியியல் பட்டங்களைப் பெற்று, அடுத்து நாசா விண்வெளி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு முயற்சித்து வருகிறார். மேலும் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவருடைய கனவாக இருக்கிறது.