ஒரு பொய்யான தகவலால் ஒட்டுமொத்த மாநிலமும் முடக்கப்பட்ட சம்பவம்!!!
- IndiaGlitz, [Saturday,November 21 2020]
ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணம் ஒன்றில் கடந்த புதன்கிழமை அன்று புதிதாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. ஆனால் அப்படி உத்தரவு வருவதற்கு காரணமாக இருந்தது ஒரு பொய் தகவல் என்பதுதான் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாகாணத்தில் வெளியூரில் இருந்து வந்தவர்களால் இதுவரை கொரோனா நோய்த்தொற்று எதுவும் ஏற்படவில்லை. ஆனால் உள்ளூரில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் மக்களுக்கு அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
ஆனால் கடந்த புதன்கிழமை அன்று அந்த மாகாணத்தில் புதிதாக 36 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. அந்த 36 பேரில் ஒருவர் பீட்சா கடையில் ஊழியராக வேலை செய்து வருபவர். அவரிடம் நோய்த்தொற்றுக்கான பின்னணியைக் குறித்து விசாரிக்கும்போது தான் கடையில் பணியாற்றும் ஊழியர் என்பதைக் கூறாமல், பயத்தில் வெளியூரில் இருந்து வந்தவர் என்றும் வெறுமனே பீட்சா வாங்குவதற்காக கடைக்கு வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் பீட்சா வாங்க வந்த பலருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகித்த அதிகாரிகள் ஒட்டுமொத்த மாகாணத்திற்கும் ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டனர். ஒரு பொய்யான தகவல் காரணமாக ஒட்டுமொத்த மாகாணமும் தற்போது ஊரடங்கால் முடக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பலரும் கவலை தெரிவித்து வருவதோடு அந்த ஊழியர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பொய் சொன்ன அந்த ஊழியர் மீது சட்டவிதிமீறல் பாயுமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு உள்ளது. ஆனால் சட்ட விதிகளில் அதற்கான இடமில்லை என்றே கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 900 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தொடர்புகளை மிகவும் கவனமாக விசாரித்து நோயைக் கட்டுப்படுத்துவதில் அந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.