கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா… ஐசிசி கோப்பை வென்று சாதனை!

இந்த ஆண்டு ஐசிசி தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பை அறிவிக்கப்பட்டபோது தரவரிசையில் பிந்தியிருந்த இந்த அணி தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று மீண்டும் ஒருமுறை தன்னுடைய பலத்தை காட்டியிருக்கிறது.

துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வுசெய்தது. அப்போதே நியூசிலாந்து வெற்றிப்பெறுவது கடினம்தான் என்று ரசிகர்கள் கணிப்பை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து கடினமாக விளையாடிய நியூசிலாந்து மிகப்பெரிய சரிவைத் தாண்டி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்திருந்தது.

இதனால் 173 என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதல் 4 ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் சிறிது தடுமாறிய அந்த அணி பின்னர், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ்ஷின் அசுரத்தனமான விளையாட்டால் 18.5 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. இதனால் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி தட்டிச்சென்றுள்ளது. இதில் ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷ்ஷுக்கும் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் அறிவிக்கப்பட்டது.

ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டி, டி20 போட்டி, சாம்பியன் டிராபி போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா 8 கோப்பைகளை வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 2006, 2009 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது. தற்போது முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று அந்த அணி மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.