கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..!

சீனாவை அச்சமூட்டிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பினால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல துரித நடவடிக்கைகளை எடுத்து வரும் சீனா வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் நிலையில், அண்டை நாடுகளும் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் படத்தை சீன சுகாதாரத் துறை வெளியிட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொரோனா வைரஸ் மாதிரியை உருவாக்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சீன விஞ்ஞானிகள் கொரோனோ வைரஸின் மரபணு வரிசையை வெளியிட்டனர். ஆனால், இந்த வைரஸ் கட்டுப்படுத்த புதிய மருந்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்காற்றும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னரே இதை வைத்து தொற்று இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.