500 எடுத்தால் 2500: ஏடிஎம் மையத்தில் குவிந்த பொதுமக்கள்!
- IndiaGlitz, [Thursday,June 16 2022]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் 500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருவதாக வெளி வந்த தகவலை அடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு 2500 ரூபாய் ஏடிஎம் மிஷினில் இருந்து வந்துள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் தனது வங்கி கணக்கை சோதனை செய்தபோது 500 ரூபாய் மட்டுமே கழிந்து இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர் சோதனை செய்வதற்காக மீண்டும் 500 ரூபாய் எடுத்தபோது மீண்டும் 2500 ரூபாய் வந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் மிக வேகமாக பரவியதை அடுத்து, அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக காவல்துறை உதவியோடு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் மையத்தை இழுத்து மூடினர். இது குறித்து முதல் கட்ட விசாரணை செய்தபோது 100 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டு தவறுதலாக வைக்கப்பட்டதால் இந்த தவறு நேர்ந்து உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காவல்துறையினரும் வாங்கி அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய் எடுத்தவர்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.