அதர்வாவின் 'கணிதன். ஒரு முன்னோட்டம்

  • IndiaGlitz, [Thursday,February 25 2016]


கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த முரளியின் திரையுலக வாரிசான அதர்வா, கடந்த 2010ஆம் ஆண்டில் 'பாணா காத்தாடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பாலாவின் பள்ளியில் 'பரதேசி'யாக வாழ்ந்து தானும் ஒரு நல்ல நடிகன் தான் என்பதை நிரூபித்தார். இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாமல் இருந்த அதர்வாவை வெற்றி நாயகனாக்க மாற்றிய திரைப்படம் 'ஈட்டி'. இந்த படத்தின் வெற்றியால் தற்போது அதர்வா முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.

இந்நிலையில் நாளை அதர்வா நடித்த 'கணிதன்' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட சயிண்டிபிஃக் த்ரில்லர், கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பிரமாண்ட தயாரிப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டும்படியான புதுமுக இயக்குனரின் பணி, 'மெட்ராஸ்', 'கதகளி' ஆகிய ஹிட் படங்களின் நாயகி கேதரின் தெரசாவின் இணைப்பு ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியில் இந்த படம் திரையிடப்பட்டபோது பத்திரிகையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை இந்த படம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


டிரம்ஸ் சிவமணியின் இசையில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பதும் குறிப்பாக அனிருத் பாடிய 'எப்பா சப்பா' பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் கே.பாக்யராஜ் காவல்துறை அதிகாரியாகவும், அவருடன் மனோபாலா, கருணாகரன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேற்கண்ட எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்க்கலாம்..