வறுமை காரணமாக உயிரை பணயம் வைத்த அகதிகள்!!! படகு கவிழ்ந்து 45 பேர் உயிரிழந்த சோகம்!!!
- IndiaGlitz, [Thursday,August 20 2020]
தென் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் சாதாரண நாட்களிலேயே வறுமை கோரத்தாண்டவம் ஆடும். அதுவும் கொரோனா பரவல் காலத்தில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வேறுநாடுகளுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் லிபியா கடல் பகுதியில் அகதிகள் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகி 45 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 37 பேர் மீட்கப்பட்டு இருப்பதகாவும் ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டு உள்ளது. லிபியாவில் தற்போது உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து இருப்பதால் அந்நாட்டில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறது. உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் வாழ்வாதாரத்திற்கு வழியைத் தேடியும் இப்படி ஆபத்தான முடிவை மக்கள் எடுப்பது பெரும் கவலை அளிக்கிறது எனவும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா பரவல், வறுமை, உள்நாட்டுப் போர் எனப்பல காரணங்களால் லிபியா மக்கள் தற்போது நெருக்கடி நிலைமையை சந்தித்து வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோல தென் ஆப்பிரிக்காவின் கானா, மாலி போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தொடர்ந்து கடல் வழியாக உயிரைப் பணயம் வைத்து வேறுநாடுகளுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது. வறுமை, வாழ்வாதாரம் போன்ற காரணங்களால் இதுபோன்ற முடிவுகளை மக்கள் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி உள்நாட்டில் இருந்து செல்லும் மக்கள் பாதுகாப்பில்லாத படகு மற்றும் கப்பல்களில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்படுகின்றனர் என்றும் பல நேரங்களில் பாதுகாப்பில்லாத பயணத்தால் மக்கள் நடுக்கடலிலே உயிரைவிட வேண்டிய அவலமும் ஏற்படுகிறது என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே ஈரான், ஈராக், சிரியா போன்ற நாட்டு மக்களும் கடல் வழியைத் தேர்ந்தெடுத்து வேறுநாடுகளுக்கு செல்லும் அவலம் தொடர்ந்து நடப்பதாக ஐ.நா. குறிப்பிடுகிறது. அவர்கள் மத்தியத் தரைக்கடல் வழியாக படகுகளில் ஐரோப்பாவிற்கு செல்ல முற்படுகின்றனர். ஆனால் இந்த பயணம் பாதுகாப்பானதாக இருப்பதில்லை எனவும் ஐ.நா கவலை தெரிவித்து இருக்கிறது.