வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்!!!
- IndiaGlitz, [Monday,November 30 2020]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் ஒரு பண்ணைத் தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்தத் தகவல் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய பகுதிகளில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே போகோ ஹரம் எனும் தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு நைஜீரியாவில் புதிதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை கட்டமைக்க வேண்டும் எனக் கருதி வேலைப்பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போர்னோ மாகாணம் மைரூகுரி அடுத்த கோசிப் எனும் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைத் தோட்டத்தில் விவசாயிகள் நேற்று விவசாயிகள் கூட்டமாக வேலைப் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் உணவு கேட்டு அந்தத் தோட்டத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபரைப் பார்க்கும்போது சந்தேகம் அடைந்த விவசாயிகள் அந்த நபரைக் கட்டி வைத்து உள்ளனர்.
அந்த நபரைத் தேடி கொண்டு போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் விவசாயத் தோட்டத்திற்கு வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த நபர் கட்டி வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த தீவிரவாதிகள் கோபம் அடைந்து, திடீரென விவசாயிகளை நோக்கி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காத்துக் கொள்ள நினைத்த விவசாயிகள் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் தொடுத்து உள்ளனர். ஆனால் அந்த இடத்திற்கு மற்ற தீவிரவாதிகளும் வந்ததால், நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் 110 விவசாயிகள் பரிதாபமாக கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இச்சம்பவத்திற்கு பல உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 110 விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா சபையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் போகா ஹரம் அமைப்பு இப்படி மனிதநேயமே இல்லாமல், நைஜீரியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் பல வேலைகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருவதாகப் பலரும் குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளனர். இதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.