ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு… 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராகக் கருதப்படும் ஷியா முஸ்லீம் பிரிவினர் நேற்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது தற்கொலை படை தாக்குதல் மூலம் திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
குண்டுஸ் மாகாணம் குண்டுஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று ஷியா பிரிவு முஸ்லீம்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். இந்த வழிபாட்டிற்கு இடையே ஒரு நபர் கூட்டத்திற்குள்ளே புகுந்து தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்புதான் காரணம் என்று தாலிபான்கள் கூறியுள்ள நிலையில் ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கும் சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கும் இடையே சிலர் சிக்கலை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்தத் தற்கொலை படை தாக்குதலை மஹம்மது அல் உய்குரி என்பவர் நடத்தியதாகவும் இவர் சீனாவைச் சார்ந்த சிறுபான்மையினரான உய்குர் இனத்தை சார்ந்தவர் என்பதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஷியா பிரிவு முஸ்லீம்கள் எங்களுடைய சகோதரர்கள்தான். எதிர்காலத்தில் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுப்போம் என்று குண்டுஸ் மாகாணத்தில் உள்ள தாலிபான்களின் பாதுகாப்பு தலைவர் முலாபி தோஸ்த் முஹம்மது தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் காபூலை விட்டு கிளம்புவதற்கு முன்பே காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு 12 அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 72 உயிரிழந்த அவலம் அரங்கேறியது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூல் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து கோஸ்ட் மாகாணத்தில் உள்ள மதம் சார்ந்த பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது குண்டுஸ் மாகாணத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இப்படி அடுக்கடுக்கான குண்டுவெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கலங்கிப்போய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments