டி20 இந்திய அணியில் அஸ்வின் தேர்வுக்கு இதுதான் காரணமா?

ஆஃப் ஸ்பின்னரான ரவிசந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் அணியில் இடம்பெற்றிருப்பது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவரும் அதேவேளையில் மீண்டும் தேர்வானதற்கு உரிய காரணங்களையும் ரசிகர்கள் அலசி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா, “தற்போது இந்திய அணிக்கு அஸ்வின் ஒரு முக்கியமான வீரர். ஐபிஎல் இல் சிறப்பாக விளையாடிவரும் அஸ்வினின் தேவை தற்போது இந்திய அணிக்கு உள்ளது. தற்போது இந்திய அணியில் இருக்கும் ஒரே ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அஸ்வின் கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். மேலும் 2018 – 10 விக்கெட்டுகள் 2019- 15 விக்கெட்டுகள் 2020 டெல்லி அணிக்காக 13 விக்கெட்டுகள் என்று தொடர்ந்து அசத்தி வருகிறார்.

அதேபோல டெஸ்ட் அணிகளில் தனது பங்களிப்பை தொடர்ந்து செலுத்திவரும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 34 வயதாகும் அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். தற்போது மீண்டும் பிசிசிஐ அவரை தேர்வு செய்திருக்கிறது.

இந்தத் தேர்வுக்கு மகிழ்ச்சி தெரிவித்த அஸ்வின் தனது டிவிட்டரில் ஒரு வாசகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “ஒவ்வொரு குகையின் இறுதியிலும் ஒரு வெளிச்சம் உண்டு. ஆனால் வெளிச்சத்தை நம்புபவர்கள் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்“ என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.