இதையெல்லாம் டிரெண்ட் செய்யலாமே! அஜித் விஜய் ரசிகர்களுக்கு அஸ்வினின் வேண்டுகோள்

சமூக இணையதளம் என்பது மிகப்பெரிய ஆயுதம் என்பதும், இதனால் சாதிக்க முடியாத பல விஷயங்களை சாதிக்கலாம் என்பதும் பல நிகழ்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி பெற சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணம். இப்படிப்பட்ட சக்தி மிகுந்த சமூக வலைத்தளங்கள் வெட்டியான வீண் சண்டைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

குறிப்பாக இன்று அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அசிங்கமாக ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து மோதிக்கொண்டது பெரும் கவலையை அளிப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித், விஜய் ரசிகர்களின் இந்த சண்டை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நமது பூமி ஒரு சிறுகோளின் தாக்குதலில் இருந்து தப்பியது. ஒழுங்கற்ற பருவமழை காரணமாக பல பகுதிகளில் இயற்கை பேரிடர் நேரிட்டு வருகின்றது. நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சியும், கொடூரமான கிரிமினல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது. ஆனால் நமது இளைஞர்கள் விஜய், அஜித் குறித்து தேவையில்லாததை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். ஆக்கபூர்வமான சில விஷயங்களையும் இவர்கள் டிரெண்ட் செய்யலாமே! என்று அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்தால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்களும் இணைந்து ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பலர் அஸ்வின் கருத்தை ஆமோதித்து கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.,