'அசுரன்' : அசரவைப்பவன்
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை மனதில் வைத்தே ரசிகரகள் பெரும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
பக்கத்து பக்கத்து ஊரில் வாழும் தனுஷ் மற்றும் ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கு இடையே ஒரு சிறு சொத்து தகராறு வருகிறது. சிமிண்ட் பேக்டரி கட்ட முடிவு செய்யும் ஆடுகளம் நரேன் குடும்பத்தினர் தனுஷின் நிலத்தை விலைக்கு கேட்க, அதற்கு தரமுடியாது என தனுஷ் மறுக்க இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பகை வளர்கிறது. ஒரு கட்டத்தில் தனுஷின் மூத்த மகனை ஆடுகளம் நரேன் தரப்பினர் கொலை செய்துவிட, அதற்கு பழிவாங்கும் வகையில் ஆடுகளம் நரேனை தனுஷின் இளைய மகன் கொலை செய்து விடுகிறார். இதன்பின் தனுஷ் மீதியுள்ள தனது குடும்பத்தினர்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், பழிவாங்க துடிக்கும் ஆடுகளம் நரேன் தரப்பினர், இருதரப்பிலும் ஏற்படும் இழப்புகள், அவமானங்கள், வேடிக்கை பார்க்கும் போலீஸ், இவற்றுக்கு இடையே முடிவு என்ன? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்
தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயம் என்ற அளவில் அவரது ஒவ்வொரு உறுப்பும் நடித்துள்ளது. சிவசாமி என்ற கேரக்டரை இதைவிட வேறு எந்த நடிகராவது சிறப்பாக செய்திருக்க முடியுமா? என்பது சந்தேகமே. தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பொறுமை, ஆவேசம், தியாகம் என தனுஷின் கேரக்டர் அந்த அளவுக்கு மெருகேற்றப்பட்டுள்ளது. அதை திரையில் காட்டும் தனுஷின் நடிப்பை புகழ வார்த்தையே இல்லை. குறிப்பாக இடைவேளை வரை அமைதியின் சொரூபமாக இருக்கும் தனுஷ், இளைய மகனால் கோழை என இகழப்படும் தனுஷ், தனது மகனின் உயிருக்கு ஆபத்து என்றதும் ஆவேசத்தில் பொங்கி எழும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல், கிளைமாக்ஸில் மகனுக்காக செய்யும் தியாகம், மகனுக்கு கூறும் அறிவுரை, மனைவி மஞ்சுவாரியரிடம் கண்களாலே சொல்லும் விடை என தனுஷ் நடிப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
கேரளாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மஞ்சுவாரியர் குறித்து தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது என்றாலும் இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அவர் இடம்பிடித்துவிட்டார். குறிப்பாக மகனின் பிணத்தை பார்த்து அழும் காட்சி, மகனை கொன்றவர்களை பழிவாங்காமல் இருக்கும் தனுஷ் மற்றும் பசுபதியை பார்த்து சீறுவது, எதிரிகளிடம் காட்டும் வீரம், தங்களுக்காக தியாகம் செய்யும் கணவரிடம் காட்டும் மரியாதை என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
பசுபதி வழக்கம்போல் தனது பங்கை சரியாக அளித்துள்ளார். ஆடுகளம் நரேன், கருணாஸ் மகன் கென், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் என அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்று சொல்வதை விட, இயக்குனர் சரியாக வேலைவாங்கியுள்ளார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. குறிப்பாக பின்னணி இசை படம் முடிந்து வெளியே வந்தபின்னரும் காதிற்குள் ஒலித்து கொண்டே உள்ளது.
சுமாரான படங்களுக்கே சூப்பராக ஒளிப்பதிவு செய்யும் வேல்ராஜ், இதுபோன்ற சூப்பரான படங்களை விட்டு வைப்பாரா? ஒளிப்பதிவு வேற லெவல். காட்டில் தனுஷ் ஓடி ஒளியும் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகளில் கேமிரா புகுந்து விளையாடியுள்ளது. படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று பெரிதாக எதையும் சொல்ல முடியாது. ராமரின் படத்தொகுப்பு அந்த அளவுக்கு கச்சிதம். பிளாஷ்பேக்கில் செருப்பு காட்சி மட்டும் கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
எழுத்தாளர் பூமணி நாவலை கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்காமல், அதே நேரத்தில் விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். படத்தில் கொஞ்சம் வன்முறை அதிகம் என்றாலும் படத்தின் கதைக்கு தேவைப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். 'ஒரே மொழி பேசுறோம், ஒரே நாட்டில் வாழுறோம், ஒண்ணா இருக்க முடியாதா?, நம்மகிட்ட இருக்குற சொத்தை பறித்து விடலாம், ஆனால் படிப்பை யாராலும் பறிக்க முடியாது. நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி, அவங்க செஞ்ச தப்பை செய்யாதே' என தனது மகனுக்கு தனுஷ் கூறும் வசனங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது
மொத்தத்தில் சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்த 'அசுரன்'
Comments