பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்தவர்கள் கைது.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் கமர்சியலுக்காக இல்லாமல் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தரமான படங்களை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கிளி ஜோசியர்களை தற்செயலாக பார்த்து அவர், தனக்கு வெற்றி கிடைக்குமா என்று ஜோசியம் பார்த்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். கிளியை கூண்டில் அடைத்து வைத்திருந்த ஜோசியர், கிளியை வெளியே கொண்டு வந்து ஒரு அட்டையை எடுக்கச் சொல்ல அந்த அட்டையில் அய்யனார் இருந்ததை பார்த்து ’உங்களுக்கு அய்யனாரே அருள் புரிந்து விட்டார், அதனால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்’ என்று ஜோசியம் கூறினார்.

இதனை அடுத்து கிளி ஜோசியர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளிக்கு வாழைப்பழத்தை ஊட்டிவிட்டு இயக்குனர் தங்கர்பச்சான் விடை பெற்று சென்றார். தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கூண்டில் அடைத்து வைத்து கிளியை கொடுமைப்படுத்துவதா? என சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் உடனடியாக வனத்துறையினர் அந்த ஜோசியர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதன் பிறகு ஜோசியர்களை எச்சரித்து விடுதலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் அரசு உயிரியல் பூங்காவில் பல பறவைகள், விலங்குகள் கூண்டில் அடைத்து வைத்திருக்கும் நிலையில் ஒரு சாதாரண ஏழை ஜோசியம் பார்த்தது தவறா? என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிளி ஜோசியம் பார்ப்பது என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு தொழிலாக ஆயிரக்கணக்கானோர் வைத்திருக்கும் நிலையில் பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்ததால் இரண்டு ஜோசியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.