கொரோனா வைரசுக்கு ஜாதகம் கணித்த ஜோதிடர்
- IndiaGlitz, [Friday,March 13 2020]
இந்தியா உள்பட உலகில் உள்ள 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கானவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸினால் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகிவிட்டபோதிலும் இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மனித இனமே பெரும் அச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு பிரபல ஜோதிடர் ஒருவர் ஜாதகத்தை கணித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கோச்சாரத்தில் ஐந்து கிரகங்கள் உபய ராசியான தனுசு ராசியில் அமரும் போது உலக சுகாதார மையத்தின் அதிகாரபூர்வமாக கொரனா வைரஸ் அறிவிக்கப்பட்டது. உபய ராசியான தனுசில் ஐந்து கிரகங்களான சூரியன், புதன், சனி, வியாழன், கேது இந்த கிரகங்களின் சேர்க்கையாலும், சனி மூன்றாம் பார்வையாக சந்திரனை பார்வை செய்வதாலும், சுகாதார மையத்தால் அதிகாரபூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. கிரகங்களின் கூட்டு செயற்கையால் இந்த வைரஸ் பரவ காரணமாக அமைந்தது.
நாம் உலக சுகாதார மையம் அறிவிக்கும் முன்பே எச்சரிக்கையாக 27.12.2019 அன்று கிரக ரீதியாக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது இருக்க சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவப் பெருமாள் கோவிலில் யாகம் நடத்தினோம். உபய ராசியில் ஏற்பட்ட கிரகசேர்க்கை, வைரஸ் பாதிப்பும், அதே மாதிரியான கிரக சேர்க்கை சர ராசியில் அமைந்ததால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கையாக வைரசை தடுக்க வழிவகை செய்யப்படும்.
நம் இந்திய நாட்டின் ஜாதகப்படி கடகத்தில் சூரியன், சந்திரன், புதன், சனி, சுக்கிரன் இந்த கிரக சேர்க்கை இருப்பதாலும்,அக்கிரகங்களை கோச்சார சனி பார்வை செய்வதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அலைபேசியில் (காலர் டியூனாக) இருமல் சப்தமும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய வழிவகைகளையும் அரசாங்கம் செய்துள்ளது.
ரிஷப லக்கனத்தில் இந்திய நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. 8ம் இடத்து அதிபதி குரு ரோக ஸ்தானமான 6-ஆம் இடத்தில் அமர்ந்து, 6ம் இடத்து அதிபதியான சுக்கிரனினை கோச்சார சனி மகரத்தில் இருந்து பார்வை செய்வதால், ரோக நிவர்த்திக்கு வழிவகை செய்யும்.
இதுஒருபுறம் இருந்தாலும் ரிஷப லக்னத்திற்கு வாயை குறிக்கும் 2ம் இடத்திற்கு அதிபதியான புதன்... 3-ம் இடமான கழுத்தில் தொண்டையில் அமர்ந்து சனி பார்வை பெறுவதால் வாயில் இருந்து வரும் இருமல் சப்தமும், மூன்றாம் இடமான காதில் விழும்படி கிரகம் செய்துள்ளது. மேலும் இரண்டாம் இடத்திற்கு அதிபதியான புதன் செய்திகளை தெரிவிக்கும் காதில் ஒலிக்க வைத்தது. அரசு சொல்வதை அனைவரும் பின்பற்றுவது நல்லது.
இந்திய ஜாதகப்படி நடப்பு சந்திர தசையில் சனி புக்தி நடைபெறுவதால் இந்த முன்னெச்சரிக்கை விளம்பரம் வெளிவர கிரகங்கள் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.