கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி!!!

 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலராகச் செயல்பட்ட இளம்பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்து உள்ளார். இச்சம்பவம் தடுப்பூசி பரிசோதனையில் ஏமாற்றத்தை ஏற்படுத்துமா என்கிற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி அதன் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் இருந்ததாகத் தகவல் கூறப்பட்டது. அதையடுத்து தற்போது மனிதர்களுக்குச் செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவப் பரிசோதனையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அப்படி பிரேசில் நாட்டில் தன்னார்வலராக செயல்பட்டு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 28 வயது இளம்பெண் ஒருவர் திடீரென உயிரிழந்து உள்ளார். இந்தத் தகவலை பிரேசில் நாட்டு சுகாதாரத் துறையும் உறுதிச் செய்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண் இறந்ததற்கான காரணம் எதுவும் வெளியிடப் படவில்லை. மேலும் அந்த இளம்பெண் இறந்ததற்கான காரணத்தை விளக்குமாறு பிரேசிலில் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. அதையடுத்து சில நாட்கள் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்தது. அந்நேரத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பூசி பரிசோதனைகளும் திடீரென நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது. தற்போது பிரேசில் நாட்டில் தன்னார்வலராக செயல்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பூசி பரிசோதனைகள் நிறுத்தப்படுமா அல்லது இந்த உயிரிழப்பு தடுப்பூசி ஆய்வுகளில் முடக்கத்தை ஏற்படுத்துமா எனப் பல சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.