சென்னையில் உதவி இயக்குனர் குத்தி கொலை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்!

  • IndiaGlitz, [Friday,January 01 2021]

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உதவி இயக்குனர்கள் இருவர் இடையே நடந்த மோதல் காரணமாக அதில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா என்பவர் வளசரவாக்கத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று புத்தாண்டு பிறந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு நண்பர்களுடன் ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள மற்றொரு உதவி இயக்குநர் மணிகண்டன் வீட்டிற்கு கொண்டு சென்றார். அவர்களுடன் நான்கு நண்பர்கள் சேர்ந்து மது அருந்திக் ஏற்படுத்தி புத்தாண்டை கொண்டாடினார்கள்.

அப்போது போதையில் மணிகண்டனும் ருத்ராவும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த ருத்ரா, மணிகண்டனின் முகத்தில் குத்தியதாகவும் அதனால் கடும் கோபமடைந்த மணிகண்டன் உடனே விறுவிறுவென வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ருத்ராவின் வயிற்றில் சரமாரியாக குத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ருத்ராவை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை கைது செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதையில் உதவி இயக்குனர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் அதில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.