சொந்தப்படம் தயாரிக்க 'சதுரங்க வேட்டை' பாணியில் நூதன மோசடி செய்த உதவி இயக்குனர்
- IndiaGlitz, [Thursday,June 20 2019]
மக்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டு மோசடி செய்வது குறித்த திரைப்படம் தான் 'சதுரங்க வேட்டை' இந்த படத்தின் பாணியில் ஒரு உதவி இயக்குனர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவரிடம் 'வீட்டில் இரிடியம் வைத்தால் செல்வம் பெருகும்' என்று மூளைச்சலவை செய்து ரூ.25 ஆயிரம் முன்பணம் பெற்றுள்ளார் மர்ம நபர் ஒருவர். பின்னர் இரிடியம் தருவதாக அரவிந்தை இரண்டு நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று இறுதியில் இரிடியம் தராமல் ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மர்ம நபரையும் அவரை சார்ந்த கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஜான் ஆல்வின்பிரபு, நாகராஜன், சதீஸ்குமார் ஆகியோர்கள் என தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. கைதானவர்களில் ஒருவரான சதீஷ்குமார் கோலிவுட்டில் தயாரான பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வேறொரு மோசடி கும்பலிடம் ரைஸ் புல்லிங் முறையில் பணத்தை இழந்த சதீஷ்குமார், அதே முறையில் தானும் பணம் சம்பாதிக்க முயற்சித்துள்ளார். இதற்காக யூடியூபில் பல வீடியோக்களை பார்த்து பல நூதன மோசடி முறைகளை கண்டறிந்துள்ளார்.
இவருடைய டார்கெட் பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே. எப்படியாவது தங்களது பணக்கஷ்டம் தீர்ந்துவிடாதா? என்று ஏங்கி இருப்பவர்களை குறிவைக்கும் சதீஷ்குமார் அவர்களின் அறியாமையையும் ஆசையையும் பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக படம் தயாரித்து, இயக்க வேண்டும் என்பதுதான் இவரது கனவாம். ஆனால் அதற்கு முன்னரே போலீசில் சிக்கி தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
எப்படியாவது தங்களுடைய கஷ்டம் தீர்ந்துவிடாதா? என்று பணத்திற்காக ஏங்கும் மக்களின் ஆசைதான் இவர் போன்ற மோசடியாளர்களின் மூலதனம் என்பது குறிப்பிடத்தக்கது