குடியுரிமை மசோதாவை எதிர்த்து வெடிக்கும் போராட்டங்கள். வீடியோ
- IndiaGlitz, [Tuesday,December 10 2019]
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாமில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால், அசாம் மாநிலத்தின் குவஹாத்தி (Guwahati), திப்ருகார்(Dibrugarh) உள்ளிட்ட இடங்களில், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் இயங்கவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அசாம் மாணவர்கள் சங்கத்தினர், திப்ருகார் (Dibrugarh) நகரின் பல்வேறு இடங்களில், டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருக்க, காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதே திப்ருகார் நகரின் மற்றொரு பகுதியில், பெண்களும், குழந்தைகளும், போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர். சாலையின் நடுவே அமர்ந்த அனைவரும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்திருக்கும் ஜோராபட்(Jorabat) என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், சிலர், டயர்களை கொளுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். திரிபுரா மாநிலத்தின் அகர்தலா உள்ளிட்ட இடங்களிலும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, அசாம் மாநிலத்தில், சோனிட்பூர், லக்கிம்பூர் மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில், பழங்குடியின மக்களின், விழாக்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹார்பின்(Hornbill) திருவிழா முன்னெடுக்கப்படுவதால், அம்மாநிலத்தில் மட்டும், முழு அடைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைவதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு, ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளார்.
This is a befitting response to @AmitShah’s polarised and contentious #CAB from the people of Assam. Chief Minister @sarbanandsonwal and @himantabiswa are answerable to the people of Assam. pic.twitter.com/c6zCmvtgNa
— Amar Sangno (@sangnoamar) December 9, 2019