தங்கமங்கை ஹிமாதாசுக்கு கிடைத்த புதிய பதவி
- IndiaGlitz, [Sunday,July 15 2018]
பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே. இந்த பதக்கத்தினால் உலக அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் பெற்றார்.
ஹிமாதாஸ் தங்கம் வென்றதை அறிந்தவுடன் அவருடைய சொந்த ஊரான அசாம் மாநிலத்தில் உள்ள திங் என்ற கிராமத்தினர் ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த ஹிமாதாஸ், பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவுக்காக இந்த பதக்கத்தை வென்றது பெருமை அளிப்பதாவும், அடுத்ததாக ஆசிய விளையாடடு போட்டியிலும் தங்கம் வெல்ல முயற்சிப்பேன் என்று ஹிமாதாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தங்கமங்கை ஹிமாதாசுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.50 லட்சம் பரிசினை அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அவர்கள் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அசாம் மாநிலத்தின் விளையாட்டு கழகத்திற்குக் அவர் பிராண்ட் அம்பாசிடராகவும் அவரை நியமனம் செய்துள்ளார். மேலும் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோய் ஒரு லட்சமும், அசாம் அத்லெடிக் அசோசியேஷன் 2 லட்சமும், முன்னாள் அமைச்சர் கவுதம் ராய் ஒரு லட்சமும் அளித்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.