கொரோனா வருமுன் முன்னெச்செரிக்கையாக மருந்து எடுத்து கொண்ட டாக்டர் பலி
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை எனினும் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும் அதிலும் கொரோனா வைரஸ் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மருந்தை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும் மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் உட்பாலிஜித் பர்மன் என்பவர் தனக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக சந்தேகப்பட்டார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவருக்கு சில நிமிடங்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு நெஞ்சு வலியின் காரணமாக அவர் அடுத்த சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபருக்கு மட்டுமே இந்த மருந்தை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யாமல் அந்த மருத்துவர் இந்த மருந்தை எடுத்துக் கொண்டதால் அவரது உயிர் பிரிந்ததாக சக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வருவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து எடுத்துக் கொண்ட டாக்டர் ஒருவர் பலியாகி உள்ளது அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.