சர்வதேச அளவில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த புது சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சர்வதேசப் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 3 ஆவது இந்தியர் என்ற சாதனையை புரிந்துள்ளார். அவருடைய சாதனையை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சாளராகவும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலர் மற்றும் இரண்டாவது ஆல் ரவுண்டர் என்ற அடையாளத்தோடு செயல்பட்டு வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புது சாதனையைப் படைத்துள்ளார்.

36 வயதான அஸ்வின் கடந்த 2010 இல் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அந்த வகையில் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகள், 113 ஒருநாள் போட்டிகள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

முன்னதாக உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் களம் இறங்கிய அஸ்வின் 24.3 ஓவர்களை வீசி வெறும் 60 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் சர்வதேசப் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 3 ஆவது வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

முன்னதாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கும்ப்ளே 956 விக்கெட்டுகளையும் ஹர்பஜன்சிங் 711 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். உலக அளவில் முரளிதரன் 1,347 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் வார்னே 1,001 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆண்டர்சன் 975 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி தற்போது வருகிறது. நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி 150 ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். இதற்கு பெரிய காரணமாக அமைந்தவர் அவஸ்வின்.

முதலில் களம் இறங்கிய சந்திரபால் ஜுனியர், கேப்டன் பிராத்வெயிட், அல்சாரி ஜோசப், அலிக் அதனேஸ் என்று அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இதை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விமர்சித்து இருந்த நிலையில் மீண்டும் அஸ்வின் தன்னை நிரூபிப்பது போன்று சர்வதேசப் போட்டிகளில் 702 விக்கெட்டுகளை வீழ்த்தி புது சாதனையைப் படைத்துள்ளார்.