கொரோனா காலத்திலும் இந்திய அளவில் வேலை வாய்ப்பின்மையைக் குறைத்து அதிரடி காட்டும் தமிழக அரசு!!!
- IndiaGlitz, [Thursday,September 03 2020]
கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப் பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் 8.3% வேலைவாய்ப்பின்மை நிலவுவதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழகத்தில் விவசாயம் மற்றும் உற்பத்தி முறைகளினால் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் 2.6 விழுக்காடு குறைந்து இருக்கிறது. தமழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காணப்பட்ட வேலை வாய்ப்பின்மையைவிட ஜுலை மாதத்தில் குறைவாக இருந்தது எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 70% மக்கள் நேரடி விவசாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதன்மூலம் கிராமப்புறங்களின் உற்பத்தி அதிகமாகக் காணப்பட்டது. இந்த ஈடுபாடு கிராமப்புறங்களின் செழுமைக்கும் வித்திட்டன. மேலும் விதைப்பு போன்ற நடவடிக்கைகளில் 29% மக்கள் நேரடியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த 2019-2020 முதல் 2020-21 வரை 2.7 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயச் சாகுபடி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலச்சாகுபடி 12 லட்சம் ஹெக்டேர் நிலமாக அதிகரித்து இருக்கிறது. சரியான பருவமழைக் காலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் இத்தகைய முன்னேற்றங்கள் சாத்தியமாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாது இறக்குமதி செய்யப்படாத குறுவைப் பயிர்களுக்கான சாகுபடிகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. மேலும் பருவமழைக் காலம் என்பதால் மேலும் வேகமான முறையில் சாகுபடி தொடங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
கொரோனாவிற்கு முன்பு தமிழகத்தைவிட மிகவும் குறைவான வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலமான குஜராத்தில் 1.9% அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவியது. அதைவிட மகாராஷ்டிரா மாநிலத்தில் 6.2% ஆக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் வேலைவாய்ப்பின்மை அளவு 49.8% ஆக உயர்ந்து காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதேபோன்ற நிலைமையை தமிழகம் சந்திக்கவில்லை என்பதுதான் இங்கு முக்கியமானது. ஜுலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அளவு முற்றிலும் குறைந்து 8.1% என்ற அளவிற்கு வந்தது.
இத்தனை மாற்றங்களும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு திட்டங்கள் மற்றும் அதிக முதலீடுகளை ஈர்த்த தொழில் நிறுவனங்களால் சாத்தியமானது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு வணிகவளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் தொடங்கப்பட உள்ளன. இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. இதனால் தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்பட விருக்கிறது. மேலும் ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ளதால் உற்பத்திகளின் பெருக்கம் அதிகமாகும். இதனால் தமிழகத்தில் வேலையின்மை நிலைமையில் முற்றிலும் மாற்றம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.