பாஜகவில் அரசியல் அவதாரம் எடுக்கிறாரா சவுரவ் கங்குலி???

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பிசிசிஐயின் தற்போதைய தலைவராக பதவி வகித்து வரும் சவுரவ் கங்குலி பாஜக சார்பாக முழுநேர அரசியல் பணியில் ஈடுபடப் போகிறார் என்று ஒரு வதந்தி கடந்த சில தினங்களாக ஊடகங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து அரசியலில் நுழைய தனக்கு விருப்பமில்லை என்ற தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தெரிவித்து இருக்கிறார்.

கங்குலி மேற்கு வங்க சட்டச்சபை தேர்தலின்போது பாஜகவிற்காக தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று கடந்த சில தினங்களாக ஊடகங்கள் கூறிவருகின்றன. இதையடுத்து தனக்கு அரசியலில் பணியாற்ற விருப்பம் இல்லை, கட்சி உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். மேலும் கிரிக்கெட் நிர்வாகியாக என்னுடைய பணியில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இவர் கடந்த 2019 இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜகவில் உறுப்பினராக இருந்து வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக சார்பாக கட்சிப் பணி ஆற்றுமாறு அழைப்பு விடுத்ததாகவும் அதையடுத்து தனக்கு விருப்பமில்லை என அவர் பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து கட்சி சார்பாக வேறு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் அவர் அரசியலில் முழுநேரப் பணியாற்ற இருக்கிறார். மேற்கு வங்க சட்டச்சபை தேர்தலின்போது பாஜகவிற்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என ஊடகங்கள் கூறிவருகின்றன. காரணம் மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால் சவுரவ் எடுக்கும் எந்த ஒரு பங்கும் அது கட்சிக்கு பெரிதும் உதவும் என்று கட்சி வட்டாரங்கள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.