குண்டு மழைகளுக்கு இடையே காதல்… நெஞ்சை துளைக்கும் உக்ரைன் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

அன்பு எல்லாவற்றையும் விட மிகப்பெரிது என்பதை உணர்த்தும் விதமாக உக்ரைன் நாட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஐ.நா. சபை முதற்கொண்டு ஒட்டுமொத்த உலக நாடுகளும் போர்க்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் நிலையில் ரஷ்யா உக்ரைனில் தனது போர் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்கிறது. இதனால் பல நகரங்கள் தீயில் பற்றி எரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் அந்த குண்டுமழை குடியிருப்புகளின் மீது விழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது.

இப்படியிருக்கும்போது உக்ரைன் நாட்டின் கியேவ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு அழகான இளம்பெண் தன் காதலனைச் சந்தித்துள்ளார். அவளது கண்களில் விடைதெரியாத பயம். இது பிரிவா அல்லது முடிவா? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறாள். அவளை அந்த இளைஞர் தேற்றுகிறார். இந்தப் புகைப்படம்தான் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டின் போர் ஆயுதப்படைகளை குறி வைத்தே நாங்கள் தாக்கிவருவதாகவும் குடியிருப்பு பகுதிகளை ஒருபோதும் நெருங்க மாட்டோம் என்று ரஷ்யா விளக்கம் அளித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் அதுவும் அழிவுதானே என்று நமக்கு கேள்வி எழலாம். எங்கோ விழுகிற குண்டுமழை தவறி குடியிருப்பில் விழுந்துவிட்டால் என்னாவது? உக்ரைன் மக்களுக்காக போராடும் அந்நாட்டு இராணுவ வீரர்களின் கதி என்ன? இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்வி எழுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் 3 ஆம் உலகப்போரை தூண்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒரு சர்ச்சை உக்ரைனில் வெடித்திருக்கிறது. இந்நிலையில் குண்டுமழைக்கு நடுவிலும் ஒரு காதல் தனது ஆத்மார்த்தமான நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. எப்படியாவது கடந்து வந்துவிடுவோம் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் காதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு என உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் இந்தப் புகைப்படம்தான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.