ரஜினியின் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ஆர்யா?

  • IndiaGlitz, [Monday,December 28 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டாகிய 'பில்லா', 'மாப்பிள்ளை' உள்பட ஒருசில படங்கள் ரீமேக் ஆகி மீண்டும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் அவருடைய சில படங்கள் ரீமேக் செய்ய பரிசீலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த், குஷ்பு, நடித்த 'பாண்டியன்' திரைப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1992ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், கேங்ஸ்டராகவும் நடித்திருப்பார். குஷ்பு அவருக்கு ஜோடியாகவும், ரஜினியின் சகோதரியாக ஜெயசுதாவும் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.


இந்நிலையில் இந்த படத்தை படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன், சகலகலாவல்லவன் உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுராஜ் ரீமேக் செய்யவுள்ளதாகவும், ரஜினியின் வேடத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.