'யட்சன்' திரைவிமர்சனம்

  • IndiaGlitz, [Friday,September 11 2015]

பிரபல எழுத்தாளர்கள் சுபா, ஜெயம் சகோதரர்களுடன் இணைந்து சமீபத்தில் கொடுத்த 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால், அதே எதிர்பார்ப்போடு பலரும் இந்த 'யட்சன்' படத்தை பார்க்க வந்திருப்பார்கள். ஆர்யா, கிருஷ்ணா, விஷ்ணுவர்தன், யுவன்ஷங்கர் ராஜா என ஒரு வெற்றிக் கும்பலே இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.

தூத்துக்குடியில் சின்ன சின்ன அடிதடிகளில் இறங்கி அதில் கிடைக்கும் வருமானத்தில் சீட்டு விளையாடும் கேரக்டர் ஆர்யா. 'தல' படத்தின் டிக்கெட்டுக்களை கிழித்துவிட்ட தூத்துக்குடியின் பெரிய ரெளடியான ஸ்டண்ட் சில்வாவின் அடியாள் ஒருவரை கோபத்தில் ஆர்யா அடிக்க, அவர் எதிர்பாராமல் இறந்துவிடுகிறார். இதனால் ஸ்டண்ட் சில்வாவிடம் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள சென்னை வருகிறார் ஆர்யா

இதேபோல், பழனியில் தந்தை நடத்தி வரும் பஞ்சாமிர்த கடையில் இருக்க பிடிக்காமல் சினிமா ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கிருஷ்ணாவை அவருடைய தந்தைக்கு தெரியாமல், காதலி ஸ்வேதா ரெட்டி சென்னைக்கு அதே நாளில் பஸ்ஸில் அனுப்பி வைக்கின்றார்.

ஆர்யா, கிருஷ்ணா இருவரும் சென்னையில் ஒரே ஏரியாவில் தங்குகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டு செல்ல வேண்டும் என ஆர்யா முயற்சிக்க, அதற்கு போலி டாக்குமெண்டுக்கள் தயாரிக்க இரண்டு லட்சம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் தீபா சந்நிதியை கொலை செய்தால் ஐந்து லட்சம் தருவதாக தம்பி ராமையா சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்டு ஜூன் 18ஆம் தேதி தீபாவை கொலை செய்ய நாள் குறிக்கிறார் ஆர்யா.

இதே நேரத்தில் பலவித முயற்சிகளுக்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் 'தல அஜித்துக்கு' தம்பியாக நடிக்க ஒப்பந்தமாகிறார் கிருஷ்ணா. அதே ஜூன் 18ஆம் தேதி பூஜை என்றும் கிருஷ்ணாவுக்கு சொல்லப்படுகிறது.

கொலை செய்ய சொன்ன குரூப் ஆர்யாவுக்கு அனுப்பும் காரில் கிருஷ்ணாவும், கிருஷ்ணாவுக்காக சினிமா கம்பெனியில் இருந்து அனுப்பிய காரில் ஆர்யாவும் மாறி ஏறிவிடுகின்றனர். இதற்கு பின்னர் நடந்த குழப்பங்கள் தான் மீதிக்கதை.


இந்நிலையில் தீபா சந்நிதிக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. ஒருவருடைய கையை பிடித்தாலே அவருக்கு நடக்க போவது என்ன என்பது அவருடைய கண்முன் தெரியும். அவர் ஆர்யா, கிருஷ்ணாவின் கையை பிடித்து சொன்னது என்ன? நடந்தது என்ன? என்பதுதான் கிளைமாக்ஸ்

ஆர்யாவுக்கு இதுபோன்ற கேரக்டர் என்றால் அல்வா சாப்பிடுவது போன்றது. சின்ன சின்ன ரெளடித்தனம் செய்வது, தல ரசிகராக இருந்து அவருடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, தல படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கபோகிறோம் என்று தெரிந்தவுடன் கொலை செய்வதை கூட கேன்சல் செய்துவிட்டு தல படத்தில் நடிக்க தயாராவது, தீபா சந்நிதியை கொலை செய்ய முயற்சிக்கும்போது காதலால் தடுமாறுவது என படம் முழுவதும் அவருடைய ஜாலியான பாணியில் கலக்கியிருக்கின்றார்.

கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் பெரிய கேரக்டர்தான். இந்த கேரக்டரில் அவர் நன்றாக நடித்திருந்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். ஸ்வேதா ரெட்டியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் கிருஷ்ணாவின் நடிப்பு ஓகே. ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் கொஞ்சம் காமெடியை கலந்து சொதப்பியுள்ளார்.

தீபா சந்நிதிக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். படத்தின் கதையே அவரை சுற்றித்தான் நடப்பதால் அதன் சீரியஸ் தெரிந்து நடித்துள்ளார். ஸ்வேதா ரெட்டிக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் ரெளடித்தனத்துடன் கூடிய காதலியாக சிறப்பாக நடித்துள்ளார்.

தம்பி ராமையாவின் வழக்கமான புலம்பல் காமெடி இதிலும் தொடர்கிறது. எம்.எல்.ஏ பதவியை பிடிப்பதற்காக கொலை மேல் கொலை செய்யும் மெயின் வில்லனும், இன்னொரு வில்லனாக நடித்துள்ள பொன்வண்ணனும் உண்மையில் வில்லன்களா? அல்லது காமெடியன்களா? என்பது கடைசி வரை புரியவில்லை. ஒய்.ஜி.மகேந்திரன் ஒருசில காட்சிகளில் வந்து மனதில் பதிகிறார்.

சுபாவின் சீரியஸான கதையை அதே சீரியஸ் திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியிருந்தால் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ஆனால் விஷ்ணுவர்தன் படத்தை முழுக்க முழுக்க காமெடி திரைக்கதையில் நகர்த்திவிட்டார். வில்லன் தேர்வு தவறானது. மனோபாலா சைஸில் இருக்கும் ஒருவரை எப்படி ஒரு படத்தின் மெயின் வில்லனாக விஷ்ணுவர்தன் தேர்வு செய்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. பொன்வண்ணன் திடீர் திடீர் என காமெடியனாகவும் சீரியஸாகவும் மாறி மாறி வருவதை ரசிக்க முடியவில்லை. கிளைமாக்ஸில் மொத்தமாக எல்லோரும் இணைந்து சண்டை போடுவது பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து பார்முலா. முதல் பாதியில் வரும் பெரும்பாலான தேவையில்லாத காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸில் வில்லன் உண்மையில் யார்? என்ற சஸ்பென்ஸ் மட்டும் ஆடியன்ஸ் எதிர்பாராதது. மற்றபடி விஷ்ணுவர்தனின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படம் கொஞ்சம் சுமார்தான்

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஓகே. குறிப்பாக பழனி, தூத்துக்குடி நகரங்களின் காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக் உள்ளது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். ஆர்யாவும் கிருஷ்ணாவும் கார் மாறி ஏறி அவரவர் இடத்திற்கு செல்வதை இவ்வளவு நீளமாக காண்பித்திருக்க தேவையில்லை.

யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே. பின்னணி இசையிலும் வழக்கம்போல் கலக்கியுள்ளார். காமெடி கலந்து ஒரு ஆக்ஷன் கதையை முதல்முறையாக முயற்சித்திருக்கின்றார் விஷ்ணுவர்தன். இந்த முயற்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் 'யட்சன்' யதார்த்தமாக இல்லை.

Read 'Yatchan' Movie Review in English

More News

அஜீத்தின் 'காதல் கோட்டை' பாணியில் 'ககக போ' திரைப்படம்?

இயக்குனர் பி.எஸ்.விஜய் என்பவர் இயக்கி வரும் 'ககக போ' என்ற படத்தில் சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.....

ரஜினி ரசிகரை அஜீத் ரசிகராக மாற்றினாரா விஷ்ணுவர்தன்?

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'யட்சன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது...

விஷால் பாணியில் தந்தையை செலக்ட் செய்த விதார்த்

கடந்த 2013ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய 'பாண்டியநாடு' படத்தில் விஷாலின் தந்தையாக மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா...

'தல 56' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பம்?

வீரம்' சிவா இயக்கி வரும் அஜீத்தின் 'தல 56' திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வசனக்காட்சிகளின்...

பாலிவுட்டில் பார்வையில் ஆர்யாவின் 'யட்சன்'

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்ய பாலிவுட்டில் சல்மான்கானும்...