'சங்கமித்ரா'வின் கதைக்களம் இதுதான்: கேன்ஸ் விழாவில் ஒரு அறிமுகம்
- IndiaGlitz, [Wednesday,May 17 2017]
எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்ற பிரமாண்ட திரைப்படத்தை அடுத்து தயாராகவுள்ள பிரமாண்டமான சரித்திர திரைப்படம் 'சங்கமித்ரா'. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தொடங்கவுள்ள பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சங்கமித்ரா' படம் அறிமுகமாகவுள்ளது.
இந்த விழாவில் 'சங்கமித்ரா' குழுவினர்களாகிய இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் திரையுலகினர்களுக்கும் 'சங்கமித்ரா' படக்குழுவினர் இந்த படத்தைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில் 'சங்கமித்ரா' பற்றி படக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:
"சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.
தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம். இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும்" இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.