ஆர்யாவின் 'டெடி' ஓடிடியில் ரிலீஸா?

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாடு முழுவதும் ரிலீசுக்கு தயாராக இருந்த பல திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக தமிழில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ஆகிய பெண்குயின் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசானது என்பதும் யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெயில் உள்பட இன்னும் சில திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இணைந்து நடித்த ’டெடி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவலை ’டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்கள் மறுத்துள்ளார். ஓடிடி பிளாட்பாரத்தில் நாடு முழுவதும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதே நேரத்தில் எங்களுடைய ’டெடி’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகும். கொரோனா நிலைமை சீரானவுடன் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக திரையரங்கில் ரிலீசாகும் முன்னால் ஓடிடியில் ’டெடி’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உறுதிபடக் கூறியுள்ளார்

ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ சூர்யாவின் ’சூரரைப்போற்று’ உள்பட ஒருசில திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களுடைய திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது