இலங்கை பெண்ணின் பணமோசடி விவகாரம்: ஆர்யாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Wednesday,August 25 2021]
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் ஆர்யாவிடம் பணம் கொடுத்ததாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆரியாவின் தரப்பிலிருந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர், ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் அதற்காக 71 லட்ச ரூபாய் அவருக்கு பணம் கொடுத்ததாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றிவிட்டதாகவும், எனவே அந்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்றும் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரித்து வந்த போது திடீர் திருப்பமாக இரண்டு நபர்கள் ஆர்யாவின் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி ஆர்யா போலவே தொலைபேசியில் பேசி பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆர்யாவின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’ஆர்யாவின் பெயரில் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்கி மோசடி செய்த இரண்டு நபர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகாருக்கும் ஆர்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற நிலையில் இந்த விவகாரம் குறித்து உண்மை நிலை தெரியும் முன்பாகவே ஆர்யா மீது மோசமான முறையில் விமர்சனம் செய்த சமூக வலைதள பயனாளிகள் மற்றும் யூடியூப் பயனாளிகள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய போகிறோம் என்று கூறியுள்ளார்.
ஆர்யா தலைமறைவாகிவிட்டார் என்றும் ஆர்யா மும்பைக்கு ஓடிவிட்டார் என்றும் பதிவு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.