ரோஜாக்களின் காதலன்....! ஆணழகன் அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
90-களில் பெண்களின் கனவு நாயகன், ஆண் மக்களே பொறாமைப்படும் அளவிற்கு அழகுற இருக்கும் ஆணழகன், ரத்தினம் அறிமுகப்படுத்திய "அழகுக்கடல் முத்து தான் அரவிந்த்சாமி".
திருச்சியை சொந்த ஊராக கொண்ட அரவிந்த்சாமியின், தகப்பனார் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார் ஆவார். கடந்த 1967, ஜூன் 30-இல் பிறந்த இவர், தனது மாமாவின் வீட்டில் தான் வளர்ந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை சென்னை சிஷ்யா பள்ளியிலும், எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்து முடித்துள்ளார். வணிகவியல் இளங்கலை படிப்பை லயோலா கல்லூரியில் படித்துமுடித்த அரவிந்த்சாமி, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றார். இவரது தாயிற்கு உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். கடந்த 1994-இல் காயத்திரி என்பவரை மணந்தார். இத்தம்பதிக்கு ஆதிரை, ருத்ரா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையிலும் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.
அழகு தோற்றம் நிறைந்த இவரை முதன் முதலாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான். அமைந்த முதல் படமே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-உடன்தான். தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, ரோஜா படம் மூலம் ஏராளமான இளம் ரோஜாக்களின் மனதில் காதல் நாயகனாக வலம்வந்தார்.
இதையடுத்து மறுபடியும், பாசமலர்கள், பம்பாய், இந்திரா, தேவராகம், மின்சாரக்கனவு, என்சுவாசக்காற்றே மற்றும் மின்சாரக்கனவு உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். தேர்ந்தெடுத்து வெகுசில படங்களில் நடித்தாலும், அனைத்து படங்களும் இவரை வெற்றிநாயகனாகவே வலம் வரச்செய்தது. ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படங்கள் தேசிய விருது மற்றும் மாநில விருதுகளை பெற்றுத்தந்தது. 90-களில் பெண்களிடம் மாப்பிள்ளை குறித்து கேட்டால் "அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்" என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு பெண்களால் நேசிக்கப்பட்ட காதல் மன்னனாகவும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியும் வைத்திருந்தார்.
காதலில் கவிதை பாடி, காமெடியில் துள்ளல் செய்து, நாட்டுப்பற்றில் கலங்க வைத்து, தமிழ்சினிமாவின் தலைசிறந்த நாயகனாக வலம் வந்த அரவிந்த்சாமி, 2000-ஆம் ஆண்டிற்கு பின் சினிமாவில் கவனம் செலுத்தாமல்,வணிக செயல்களில் ஈடுபடத் துவங்கினார்.
வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்த அர்விந்த்சாமி, பெரும்பாலும் தனிமையையே விரும்புவாராம். பெரும்பாலும் பிறரிடத்தில் அதிகம் பேசவிரும்பமாட்டார். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுந்த இவர், ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதான் தினமும் தூங்குவார். விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் விளையாட்டுகளை விரும்பி விளையாடுவாராம்.
மென்பொருள் செயலிகள் உருவாக்குவதில் ஆர்வம் அதிகமுள்ள அரவிந்த்சாமி, தொழில்நுட்பம் குறித்துதான் பல பிசினஸ்களை செய்து வருகிறார். Talent Maximus என்ற நிறுவனத்தை நிறுவிவரும் இவர் தங்களுடைய நிறுவனம் மூலமாக வர்க் ஃப்ளோ ஆப்ஸ், ப்ராசஸ் அவுட் சோர்ஸிங் உள்ளிட்ட வேலைகளை செய்து தருகின்றார். அப்ளிகேஷன்கள் டெவலப் செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதில், மருத்துவர்கள் அரவிந்த்சாமி எழுந்து நடக்க சில வருடங்கள் ஆகிவிடும் என்று கூறியிருந்தனர். ஆனால் பாசிட்டிவ் எனர்ஜியும், தன்னம்பிக்கையும் கொண்ட இவர் மராத்தானில் கலந்து கொண்டு, சுமார் 21 கிமீ வரை ஓடியுள்ளார்.
2005-க்குப்பின், 7 வருடங்கள் கழித்து கடந்த 2012-இல் மணிரத்னம் அவர்களின் "கடல்" படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இப்படம் இவருக்கு தோல்வியை தழுவித்தந்தாலும், 2015-ல் மோகன்ராஜா இயக்கிய "தனி ஒருவன்" படம் மூலமாக மாஸ் வில்லனாக தோன்றியது, மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இப்படத்தில் வரும் சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரின், "வில்லனிசம்" பெரும்பான்மையான ரசிகர்களால் கவரப்பட்டது. இந்த கதாபாத்திரம் வில்லனுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு பெரிதும் பேசப்பட்டது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகவிருக்கும், ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப்படமான, "தலைவி" படத்தில் எம்ஜிஆர்-ஆக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இவரின் "எம்ஜிஆர் கெட்-அப் புகைப்படங்கள்" சமூகவலைத்தளங்களில் வைரலாகியும், மக்களால் பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தன்னுடைய 54 அகவையை கொண்டாடும் அரவிந்த்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! தன்னுடைய சினிமாத்துறையிலும், வணிகத்திலும் அவர்பணி சிறக்கட்டும்......
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments