மின்னல் வேகத்தில் முடிவடைந்து வரும் 'செக்க சிவந்த வானம்'

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

ஒரு ஹீரோவை வைத்து படமெடுக்கும் இயக்குனர்களே அந்த படத்தை முடிக்க பல சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம், தனது அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' படத்தில் நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நடிப்பில் இயக்கி வருகிறார்.

பொதுவாக மணிரத்னம் படம் மெதுவாக படமாக்கப்படும் என்று கூறுவதுண்டு. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும்  இந்த படம் விரைவில் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இதனை நிரூபிப்பதுபோல் நடிகர் அரவிந்தசாமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ள அரவிந்தசாமி, 'செக்க சிவந்த வானம் 'படத்தின் எனது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னம் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர்களுடன் பணிபுரிவது என்பதும் ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை கொடுக்கும். இந்த ஒட்டுமொத்த படக்குழுவினர்களை நான் மிகவும் நேசிக்கின்றேன். இந்த படம் எனக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என்று உணர்கிறேன். மேலும் மே 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புரமோஷன் வேலைகளை அடுத்து கவனிக்கவுள்ளேன்' என்று அரவிந்தசாமி கூறியுள்ளார்.

அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.