அருவியும் ஆஸ்மாவும் ஒரே கதையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படத்தில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசிலர் மட்டும் அதில் இருக்கும் ஒரே ஒரு சர்ச்சைக்குரிய வசனத்தை மனதில் வைத்து கொண்டு இந்த படம் எகிப்திய திரைப்படமான 'ஆஸ்மா' என்ற படத்தின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர். உண்மையில் ஆஸ்மாவின் கதை என்ன தெரியுமா? அதை தெரிந்து கொண்ட பின்னர் நீங்களே முடிவு செய்யுங்கள் 'அருவி'யும் ஆஸ்மா'வும் ஒன்றா என்று?
ஆஸ்மாவும் அவரது கணவரும் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் தம்பதி. ஆனால் எதிர்பாராதவிதமாக கணவன் ஜெயிலுக்கு செல்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வந்தவுடன் மனைவியை தொடக்கூட மறுக்கிறார். காரணம் தனக்கு வந்த எய்ட்ஸ் தனது மனைவிக்கும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில். இதையறிந்து கொள்ளும் மனைவி, இருவரும் கணவன் - மனைவியாக இல்லாவிட்டாலும் அண்ணன் தங்கை போல் வாழ்வோம்' என்று ஆறுதல் கூறுகிறார்.
ஆனாலும் கணவனின் குழந்தை ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் ஓரமாக ஒரு எண்ணம் ஆஸ்மாவுக்கு உள்ளது. அப்போது அவள் டாக்டரிடம் கலந்தாலோசிக்கும்போது தான் கவனமாக இருந்தால் குழந்தைக்கு எய்ட்ஸ் வராமல் தடுத்துவிடலாம் என்று அறிகிறார். பின்னர் கணவரிடம் தனக்கும் எய்ட்ஸ் இருப்பதாகவும், நாம் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கணவனை சமாதானப்படுத்துகிறார்.
தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக பொய் சொல்லி ஒரு குழந்தையையும் பெற்றெடுக்கிறாள். அவள் நினைத்தபடியே குழந்தைக்கு எய்ட்ஸ் இல்லை, ஆனால் அவளுக்கு எய்ட்ஸ் வந்துவிடுகிறது. குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதால் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு எய்ட்ஸ் நோயுடன் போராடுகிறாள். இந்த நிலையில் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் அந்த ஆபரேசன் செய்யாவிட்டால் மரணம் அடைய நேரிடும் என்றும் ஆஸ்மா தெரிந்து கொள்கிறாள்.
ஆனால் எய்ட்ஸ் நோயாளிக்கு ஆபரேசன் செய்ய மருத்துவர் மறுக்கிறார். இதனை எதிர்த்து ஒரு டிவி நிகழ்ச்சியின் மூலம் தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியுலகுக்கு கொண்டு வருகிறாள் ஆஸ்மா. தான் எய்ட்ஸ் நோயாளி என்று வெளியேதெரிந்தால் தனது மகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று ஆஸ்மா எடுக்கும் உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் தான் படத்தின் முடிவு
இந்த படத்திற்கும் அருவி' படத்தின் கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? ஒரு விபத்தின் மூலம் எதிர்பாராமல் எய்ட்ஸ் நோயாளியாகும் அருவி, குடும்பத்தின் நம்பிக்கையை இழந்து, மூன்று பேர்களால் சீரழிக்கப்பட்டு பின்னர் நியாயம் கேட்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கின்றாள். இந்த இரண்டு படத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டு படத்திலும் டிவி நிகழ்ச்சி வருகிறது என்பதுதான். அதுவும் கூட வெவ்வேறு பிரச்சனைகளுக்காக.
ஆஸ்மா படத்தின் கதை என்னவென்றே தெரியாமல் வேண்டுமென்றே 'அருவி' படம் 'உருவி' எடுத்தது என்று பதிவிடும் ஒருசிலர் இனிமேலாவது ஒரு நல்ல படத்தை குறை கூறும் முன் தீர விசாரிப்பது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments