'கேப்டன் மில்லர்' படத்தில் இன்னொரு நாயகியும் நடித்திருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகி ஆக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடித்திருக்கிறார் என்றும் அவரது கேரக்டரை படக்குழுவினர் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், நிவேதா, ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ’அருவி’ அதிதி பாலன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிதி பாலன் இந்த படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இவரது காட்சிகள் சுதந்திரத்திற்கு முந்தைய கதையில் வருகிறது என்று அது மட்டும் இன்றி ’கேப்டன் மில்லர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் இவரது கேரக்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தற்போது முழு வீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.