தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்.. என்ன பணி செய்துள்ளார் தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,May 21 2023]
தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அருண்ராஜா காமராஜ் என்பதும், இவர் தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடிக்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும், இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியர் மற்றும் பாடகராக தான் அருண்ராஜா காமராஜ் அறிமுகமானார் என்பது தெரிந்ததே. குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’பைரவா’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ ’தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடல் எழுதி பாடியுள்ளார்,
இந்த நிலையில் தற்போது தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் ஒரு பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார் என்றும் ’அரக்க சம்பவம்’ என்ற இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ’உரியடி’ விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.