சமூக விரோதிகளை அடையாளம் காட்டுங்கள்.. ரஜினிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் சம்மன்..!
- IndiaGlitz, [Tuesday,February 04 2020]
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள், 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பார்வையிடுவதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.
தூத்துக்குடி சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்தார். இதற்கிடையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்ள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார்.
அவர், ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு சமூக விரோதிகள் நுழைந்தது குறித்த தகவல்கள் தெரியும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கைவைத்திருந்தார். இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.