மாயன் காலண்டரை மண்ணாக்கி... நயன்தாரா பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற ஒரே சூப்பர்ஹிட் வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் நெல்சன். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சிவகார்த்திகேயன் உள்பட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்சனின் நெருங்கிய நண்பரும் இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனது அன்பு அண்ணன் மற்றும் குருநாதன் நெல்சன் அவர்களுக்கு எனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாயன் காலண்டரை மண்ணாக்கி, மக்கள் மனதில் பொன்நகை எந்நாளும் மின்ன, இந்த தம்பியின் அன்பு வாழ்த்துக்கள் அண்ணே’ என்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் நெல்சன் ’மாயன் காலண்டர் லெவலுக்கு எல்லாம் போக வேணாம். பாட்டு கண்டிப்பா இருக்கு’ என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து கூறிய அருண்ராஜா காமராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’டாக்டர்’ திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் குறைந்தது ஒரு பாடலாவது எழுதுவது உறுதி என்பது தெரியவந்துள்ளது.