லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுத்த பொதுமக்கள்… களைக்கட்டும் போராட்டம்!!!
- IndiaGlitz, [Friday,November 06 2020]
கள்ளக்குறிச்சி அருகே கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட லஞ்ச ஒழிப்பு நுகர்வோர் பேரவையினர் என்ற ஒரு அமைப்பும் கலந்து கொண்டு இருக்கிறது. அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அடுத்த எடுத்தவாய்நத்தம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் நபர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்ற அரசின் இலவசத் திட்டங்களுக்கும் அவர் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாகவும் ஆனால் இதுவரை யாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவை பெற்றுத் தரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தில் பொதுமக்களிடம் லஞ்சமாக வாங்கியப் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். தொடர்ந்து லஞ்ச குற்றங்களில் ஈடுபட்டு வரும் அந்த நபரை பணியில் இருந்து நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதாகக் கூறி போலீசார் லஞ்ச ஒழிப்பு நுகர்வோர் பேரவையைச் சார்ந்த 39 பேரை கைது செய்து பிறகு மாலையில் விடுவித்தனர். லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை தண்டிக்கும் வகையில் பொதுமக்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.