பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட் உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,March 10 2016]

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சேரன் நடித்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற திரைப்படம் 'சினிமா டு ஹோம்' என்ற திட்டத்தின்படி நேரடியாக டிவிடியாக ரிலீஸ் ஆனது. இதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியப்பன் என்பவர் சேரனிடம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு டிவிடி விற்பனை ஆகாததால், தான் செலுத்திய பணத்தை திருப்பித்தரும்படி சேரனிடம் பழநியப்பன் முறையிட்டார்.


இதனால் பழநியப்பனுக்கு சேரன் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்ததாகவும் அந்த காசோலை வங்கியில் போதிய பணமின்றி திரும்பி வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழநியப்பன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சேரன் மீதும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் சேரனும் அவரது மகளும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, சேரன் மற்றும் அவரின் மகள் நிவேதா பிரியதர்சினி ஆகிய இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.