இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!
- IndiaGlitz, [Sunday,June 02 2019]
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று தமிழக துணை முதல்வரும், கல்வி அமைச்சரும் கூறியுள்ள நிலையிலும் எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய பிரச்சனையாக்கி அதிலும் விளம்பரம் தேடி வருகின்றனர். வழக்கம்போல் நெட்டிசன்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்ட் செய்து தாங்களும் போராளிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பை அனைவரும் கையில் எடுத்துள்ள நிலையில் தமிழின் பெருமையை பறைசாற்றியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் இசையமைத்த 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன? என்ற மரியான் படப்பாடலை ஒரு பஞ்சாபி சிக்கியர் பாடும் வீடியோவை பதிவு செய்து 'தமிழ் பஞ்சாபிலும் பரவிவிட்டது' என்று ரஹ்மான் பதிவு செய்துள்ளார்.
இந்தி எதிர்ப்பை காட்டும் தீவிரத்தில் பாதியையாவது தமிழ் மொழியை வளர்ப்பதில் காட்டுங்கள் என்று போலி போராளிகளுக்கு அவர் சொல்லாமல் சொல்லியிருப்பதாகவும், அதே சமயத்தில் இந்தி திணிப்பை வித்தியாசமாக எதிர்த்துள்ளதாகவும் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஹர்பஜன்சிங் போன்ற பஞ்சாபிகள் தமிழ் மொழியில் டுவீட் போடுவதை குறிப்பிட்டுள்ள நில நெட்டிசன்கள், 'ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது போல் தமிழ், பஞ்சாபிலும் பரவியுள்ளது உண்மைதான்' என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Tamizh is spreading in Punjab ?? https://t.co/VU9q17c9e5
— A.R.Rahman (@arrahman) June 2, 2019