ஏஆர் ரகுமானின் மகளைச் சீண்டிய பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
- IndiaGlitz, [Monday,February 17 2020]
தஸ்லிமான நஸ்ரின், முஸ்லிம் பெண்கள் மத அடிப்படையில் ஒடுக்கப் படுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஒரு முற்போக்கு எழுத்தாளர். அடிப்படையில் வங்காளத்தைச் சேர்ந்த தஸ்லிமான நஸ்ரின் 1970 முதல் இஸ்லாமிய மதக் கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட விதிமுறைகளைக் கொண்டுள்ளது எனத் தனது படைப்புகளில் வெளிப்படுத்தி வந்தார். இவரது கருத்துக்கள் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப் பட்டது. பின்பு வங்காளத்தில் இருந்து நாடு கடத்தப் பட்டு சுவீடன், அமெரிக்க முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார். 2004 இல் இருந்து இந்தியாவின் ஒப்புதலைப் பெற்று இந்தியாவில் தஞ்சமடைந்தார். கொல்கத்தாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப் பட்டுள்ள இவர், அவ்வபோது பொது பிரச்சனைகளில் தலையிட்டு தனது கருத்தைக் கூறி வருகிறார். தற்போது ஏர்.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா குறித்து தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்து மதச் சண்டையை கிளப்பி உள்ளதாகக் குறச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக ஏர்.ஆர். ரஹ்மான் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். பொது வெளியில் இவரைக் குறித்த எந்த செய்தியும் வெளிவராது என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த 2019 பிப்ரவரி மாதத்தில் முப்பையில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ஏர்.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதில் ஏர்.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தனது முகத்தை புர்க்காவால் மறைத்துக் கொண்டு மேடையில் பேசினார். இதைக் குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்பட்டன. ஏர்.ஆர். ரஹ்மான் இரட்டை வேடம் போடுகிறார். தனது மகளை கட்டாயப்படுத்தி புர்க்கா அணியுமாறு செய்துள்ளார் என சமூக வலைத் தளங்களில் குற்றம் சாட்டப் பட்டது.
இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஏர்.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பதிவில், ‘முக்காடு அணியாத மகள் ரஜிமா, பர்தா அணிந்த மகள் கதிஜா, தலையில் முக்காடு மட்டும் அணிந்திருந்த தனது மனைவி’ ஆகியோரின் புகைப் படங்களை பதிவிட்டு, ”உடைகள் அணிவது அவர்கள் விருப்பம்” என்று தெரிவித்து இருந்தார். மேலும், உடைகள் அணிவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. எனது உடைத் தேர்வில் எனது பெற்றோர்களின் வற்புறுத்தல் இல்லை. அதே போல எனது குழந்தைகளுக்கும் தங்களது உடைகளைத் தேர்ந்தெடுத்து கொள்வதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. உண்மை நிலை தெரியாமல் கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இச்சம்வம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில், மேடையில் கதிஜா புர்க்கா அணிந்து பேசுவது போல இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு தஸ்லிமா நஸ்ரின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 11 அன்று சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அதில் “எனக்கு ஏர்.ஆர். ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அன்பு மகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” எனக் கருத்து கூறியிருக்கிறார்.
தஸ்லிமா நஸ்ரினின் டிவிட்டர் பதிவு சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதற்கு கதிஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்து தனது வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார். “ஒரு வருடம் கழித்து மீண்டும் இவ்விகாரம் சுற்ற தொடங்கியுள்ளது. நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், ஒரு பெண் அணிய விரும்பும் உடையைப் பற்றி எல்லா மக்களும் கவலைப் படுகிறார்கள். நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். இந்தச் செய்தி வரும்போதெல்லாம் எனது கோபத் தீயை மூட்டுகிறது. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். பல ஆண்டுகளாக காணாத விஷயங்களை கடந்த ஒரு வருடத்திற்குள் அனுபவித்தேன். நான் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தேர்வுகளைக் குறித்து எப்போதும் வருத்தப் படவில்லை. நான் செய்வதைக் குறித்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே என்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி. கடவுளின் விருப்பப் படியே என்னுடைய செயல் இருக்கும். நான் இதைக் குறித்து மேலும் பேச விரும்பவில்லை. சிலர் எதற்கு இவ்விஷயத்தில் நான் பதில் அளித்து வருத்தமடைய வேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால் நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால் இதைச் செய்கிறேன்.
அன்புள்ள தஸ்லிமான நஸ்ரின், “என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து கொஞ்சம் நல்ல காற்றை சுவாசியுங்கள். ஆனால், எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. மாறாக நான் செய்யும் விஷயங்களில் நான் உறுதியாக உணர்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று Google ல் தேடிப் பாருங்கள். பெண்ணியம் என்பது மற்ற பெண்களை சாடுவது, அவரின் தந்தையை இழுப்பது அல்ல. மேலும், நீங்கள் ஆய்வு செய்வதற்காக நான் எந்த புகைப்படத்தையும் அனுப்பவில்லை என நினைக்கிறேன். எனவே எனது புகைப்படத்தை வேறு எங்கும் பயன்படுத்த வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏர்.ஆர். ரஹ்மான் என்ற சினிமா பிரபலத்தை மத அடிப்படையில் இழுத்து வைத்து பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மாறாக முற்போக்கு நோக்கிலும் சில கருத்துக்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.