குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து… முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?‘
- IndiaGlitz, [Wednesday,December 08 2021]
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 7 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. குன்னூர் அடுத்த காட்டேரி மலைப்பாதையில் இராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்ற இராணுவ ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகள் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மோசமான நிலையில் கருகியதால் யார் என அடையாளம் காணுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முப்படைகள் தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன? என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.