தொடர்நது குண்டு மழை பொழியும் அர்மீனியா- அஜர்பைஜான் மோதல், மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் உலகமே கதிகலங்கி இருக்கும் நேரத்தில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவும் அஜர்பைஜானும் தங்களுக்குள் கடுமையான தாக்குதலை நடத்திக் கொள்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இருநாட்டு இராணுவங்களும் தற்போது குண்டு மழை பெய்து கொள்ளும் அளவிற்கு உலக அளவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல் கடந்த மே மாதம் முதல் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த எல்லைச் சிக்கல் பின்னர் உலக அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறிப்போனது. ஆரம்பத்தில் இந்தியாவிற்கும் சீனாவுக்குமான எல்லை மோதலாக ஆரம்பித்த இந்தப் பிரச்சனை சீனாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டவும் செய்தது. இந்தியாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய சில உலக நாடுகள் சீனாவிற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியதோடு இந்தியா மேற்கொண்ட அதே பொருளாதார தடையை சீனா மீது எடுக்கவும் செய்தது. மேலும் இந்தச் சிக்கல் தென்சீனக் கடல் பகுதி பிரச்சனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் உலக நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்படுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. தற்போது அதேபோன்ற ஒரு சிக்கல் ரஷ்யாவிலும் ஆரம்பித்து இருக்கிறது. சோவியத் ரஷ்யா கூட்டிணைவு நாடுகளாக இருந்தபோது அர்மீனியாவும் அர்பைஜானும் ஒரே எல்லைக்குள் இருந்தன. பின்னர் சோவியத் ரஷ்யா உடைந்தபோது இருநாடுகளும் தனித்தனி நாடுகளாக மாற்றப்பட்டன.
அப்படி மாறின இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நாகர்னோ-காராபாக் என்ற மலை வளம் மிக்க ஒரு பகுதி இருக்கிறது. இந்தப் பகுதி குறித்த சிக்கல் தற்போது உலகளவில் கடும் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த எல்லைப் பகுதி குறித்து இருநாடுகளுக்கும் ஏற்கனவே கடந்த 1988 ஆம் ஆண்டு சிக்கல் முளைத்து அது 1994 ஆம் ஆண்டு வரை பல போர்களாகப் பிரதிபலித்தது. இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இருநாடுகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன.
அதோடு பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து புலம் பெயர்ந்ததாகவும் கூறப்படும் நிலையில் அதேபோன்ற ஒரு பதட்டம் தற்போது மீண்டும் துவங்கி இருக்கிறது. நாகர்னோ-காராபாக் எல்லைப் பகுதி குறித்து இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதியில் 1994 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த எல்லைப் பகுதி அர்பைஜானுக்கே சொந்தமாகியது. இந்த ஒப்பந்தத்தை சர்வதேச அமைப்புகளும் ஒப்புக் கொண்டன.
இப்படி பல ஆண்டுகளாக அர்பைஜானுக்கு சொந்தமாக இருக்கும் பகுதி மீது தற்போது அர்மீனியாவைச் சேர்ந்த சில பிரிவினை வாதக் கும்பல் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து இருக்கின்றன. ஆனால் அர்மீனியாவின் அரசு பிரிவினைவாதக் கும்பலின் முடிவிற்கு எதிராகவே இருக்கிறது. ஆனாலும் அர்மீனியாவில் இருக்கும் சில கும்பல் அர்பைஜான் மீது கடுமையான போர் பதற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கின்றன. இதனால் ஆர்மீனியாவின் ஒரு பகுதி மற்றும் அர்பைஜானின் சில முக்கிய நகரங்கள் தற்போது குண்டு மழையில் நனைந்து வருகின்றன.
அரமீனியா என்பது கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் மக்களால் நிறைந்த நாடு. அர்பைஜான் என்பது எண்ணெய் வளம் மிகுந்த முஸ்லீம் மக்களால் நிறைந்த நாடு. இந்த இரு நாடுகளுக்கும் இடையே சிக்கலாக இருக்கும் பகுதி நாகர்னோ-காராபாக் எல்லைப் பகுதி. இந்த பகுதியில் அர்மீனியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். சோவியத் கூட்டமைப்பு உடையும்போது இந்தப் பகுதி குறித்து நடைபெற்ற ஓட்டெடுப்பில் இவர்கள் அர்மீனியாவோடு சேர்ந்து கொள்ளவே விருப்பம் தெரிவித்தார்களாம். ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் அது போர் பதற்றமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆரம்பித்த சிக்கல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியில் இந்த பகுதி அர்பைஜானுக்கு செந்தமானதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அர்பைஜானுக்கு சொந்தமாக பல ஆண்டுகளாக இருந்துவரும் இந்தப் பகுதி மீது தற்போது அர்மீனியாவின் சில பிரிவினைவாதக் கும்பல் மேற்கொள்ளும் போர் பதற்றத்தால் தற்போது அர்பைஜானின் சில முக்கிய நகரங்கள் கடுயைமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. பிரிவினைவாதக் கும்பல் நடத்திய தாக்குதலால் அர்பைஜானின் கஞ்சா நகர மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளனர். மேலும் தொடர்ந்து பொழிந்த குண்டு மழையால் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற தாக்குதலில் 220 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்பது பற்றிய தகவல்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை. மேலும் நாகர்னோ-காராபாக் பகுதியை முற்றுகையிட்டுள்ள பிரிவினைவாதக் கும்பல் தங்களை சுதந்திரப் பகுதிகளாக அறிவித்துக் கொள்ள முற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஒரு பொறி பல ஆண்டுகளாக இருநாட்டு மக்களுக்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி பல்லாயிரக் கணக்கான உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கிறதா என்பதைக் குறித்தும் சில ஊடகங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றன. கொரோனாவுக்கு நடுவில் மனிதர்கள் உயிர்வாழ்வதே பெரும் சிக்கலாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாடுகளில் நடக்கும் இதுபோன்ற சம்பங்கள் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments