வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் ரஜினிகாந்த்: அர்ஜூனா மூர்த்தி பதில்

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

ஏற்கனவே கமல்ஹாசன் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கூறிய நிலையில் அவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது குறித்து ரஜினி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்ட கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுனா மூர்த்தி பதிலளித்துள்ளார்

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என்றும், மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று ரஜினி எடுத்த முடிவை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்

யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம் என்றும் தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத் தர மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் என்னை பொருத்தவரை அவர் தவத்திரு ரஜினிகாந்த் என்றும், தெய்வ குணம் உள்ளவர் என்றும், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் வெளிப்படையாக மருத்துவ விஷயங்களை பேசி ஆலோசித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வரும் தேர்தல் நேரத்தில் அவரது மனதில் என்ன உண்மை உதிக்கின்றதோ, அதன்படி முடிவு எடுத்து யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் அர்ஜுனா மூர்த்தி கூறியுள்ளார்