இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன்சிங் காலமானார்

  • IndiaGlitz, [Sunday,September 17 2017]

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய விமானப்படையில் 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதியுமான அர்ஜன் சிங் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 98

முன்னதாக நேற்று அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாரத பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதே மாரடைப்பு காரணமாக காலமானார்.

கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது 44 வயதே ஆன அர்ஜன்சிங், இந்திய விமானப்படைக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தி வெற்றிக்கு வித்திட்டவர். எனவே இவர் இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் என்றும் அழைக்கப்பட்டார்

அர்ஜன் சிங் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் 5 ஸ்டார் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றார். இந்திய விமானப்படையில் ஃபீல்டு மார்ஷலுக்கு நிகரான அந்த பதவியை வகித்த ஒரே நபர் என்ற பெருமையும் அவருக்கு உரியதே.

அர்ஜன்சிங் மறைவிற்கு அரசியல் தலைவர்களும் ராணுவ உயர்திகாரிகளும் தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்