அரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு!!! ஏஐசிடிஇ அதிரடி!!!
- IndiaGlitz, [Wednesday,September 30 2020]
தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்த முடிவிற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) இம்முடிவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. மேலும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிப்பது பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் AICTE விதிகளுக்கு பொருந்தாது எனவும் கருத்துக் கூறியது.
இதையடுத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக்கூறிய AICTE அம்மாணவர்களுக்கு முறையாகத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு முறையாகத் தேர்வு நடத்துமாறு தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டதாக AICTE தற்போது தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட AICTE அரியர் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப் படவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் தமிழக அரசு, யுஜிசி விதிகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு இருக்கிறது எனத் தொடர்ந்து கூறி வந்தாலும் AICTE இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை எனச் சிலர் விமர்சனம் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் மீண்டும் மீண்டும் தமிழகத்தின் அரியர் தேர்ச்சி முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிக்கொண்டே இருப்பது பற்றி மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.